பிரிவுகள்
அனுபவம்

மகிழ்ச்சியாக வாழ்வது என்பது…

எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.

எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.

இங்கு பெற்றொர் பிள்ளைகள் என்ற உறவானது ஒருவரின் வாழ்வினூடு இன்னுமொருவர் வாழ்வதாகவே இருக்கிறது. பெரும்பாலான பெற்றொர் தங்கள் வாழ்நாளில் தம் விருப்பிற்கோ மகிழ்விற்கோ வாழ்வதில்லை. அவர்கள் தமக்கான செலவுகள் எதுவும் செய்வதில்லை, பொருட்கள் எதுவும் வாங்குவதில்லை, பயணங்கள் எதுவும் செல்வதில்லை. பிள்ளை வளர்ப்பு என்பது மட்டுமே இங்கு முன்னிறுத்தப்படுகிறது. இங்கு வளரும் பிள்ளைகளும் பெற்றோராலும் சமூகத்தாலும் எதிர்பார்கப்படும் குறித்த வாழ்க்கைப் பாதையில் மட்டுமே செல்ல பழக்கபட்டுவிடுகிறார்கள். இதில் பெற்றோரின் எதிர்பார்ப்பு தங்கள் எதிர்பார்புக்கமைய பிள்ளைகள் வாழவ்வது என்று ஆகிறது. பிள்ளைகளின் எதிர்பார்பு பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவது என்று ஆகிவிடுகிறது. தமது வாழ்க்கையின் மகிழ்ச்சியை அடுத்த தலைமுறையில் தேடுவதற்கு அவர்களும் தயாராகிவிடுகிறார்கள்.

எல்லாரும் பெற்றார் பிள்ளைகளுக்காகச் செய்யும் தியாகங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதன் காரணமாக அந்த பெற்றோர் எதிர்பார்ப்பதை பிள்ளைகள் செய்வது அவசியம் என்றும் சொல்கிறார்கள். பெற்றோர் பிள்ளைகள் மகிழ்வாக வாழ்வதற்கே அறிவுரை சொல்வதாகவும் சொல்கிறார்கள். அப்படியாயின் மகிழ்ச்சியாக வாழும் பிள்ளைகள், தங்கள் மகிழ்ச்சியை விடுத்து, பெற்றோர் சொல்லும் வழியில் மகிழ்ச்சியை தேடுவதில் உள்ள நியாயம் என்ன? பெற்றாருக்காக தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்யும் பிள்ளைகள், தங்கள் பிள்ளைகள் தமக்காக அவர்களின் மகிழ்ச்சியை தியாகம் செய்ய எதிர்பார்ப்பதில் உள்ள நியாயம் தான் என்ன? இந்த முடிவில்லா சுழற்சியின் முடிவு தான் என்ன?

குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை மற்றவரின் மகிழ்ச்சிக்காகத் தியாகம் செய்தால், இறுதியில் யாராவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? தமது மகிழ்ச்சிக்குக் காரணம் மற்றவரின் தியாகம் எனின், அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நிலையானதாக இருக்குமா?

மற்றவரை பாதிக்காமல் தங்கள் மகிழ்ச்சிக்காக வாழ்பவர்களை சுயநலவாதிகளாக முத்திரை குத்தி, அவர்களை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கி, அவர்களின் மகிழ்ச்சியில் தவறு காணவே எல்லாரும் தயாராக இருக்கிறார்கள். ஒரு தனிநபர் மற்றவர்களை பாதிக்காத வகையில் மகிழ்சியுடனும் திருப்தியுடனும் வாழ்வதில் என்ன தவறு?

மற்றவர் வகுத்த பாதையில் வாழ்வது மட்டுமா இங்கு முக்கியமாகிறது? எல்லோரும் மகிழ்சியாக வாழ்வதே முக்கியம் என்றல்லவா சொன்னார்கள்!