பிரிவுகள்
தொழில்நுட்பம் Oliyoodai Tamil Podcast

கணினிசார் போர் முறைமைகள் – ஒரு அறிமுகம்

இன்றைய நவீன உலகில் கணினியும் இணையமும் சேர்ந்து உருவாக்கியுள்ள புதிய போர் முனை எத்தகையது? இது ஏன் எதிர்காலம் இல்லை, நிகழ்காலம்…

எல்லாமே கணினி என்று ஆகிவரும் (ஆகிவிட்ட) எங்களின் வாழ்க்கை முறையில், எமது தனிப்பட்ட செயற்பாடுகள் மட்டும் என்றில்லாமல், பொதுவான பல தொழிற்துறைச் செயற்பாடுகளும் கணினியுடனும் இணையத்துடனும் இணைந்தே செயற்பட்டுவரத் தொடங்கியிருக்கின்றன. உலகெக்கும் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நாடுகளின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் என்று எல்லாமே கணினி மயமாகி வருகின்றன. உற்பத்தி சாலைகளிலும் இதர தொழிற்துறை நிறுவனங்களிலும் SCADA Systems போன்ற மென்பொருட்களே முக்கிய கட்டளைகளை கணினி வழியாக வழங்கவும் கண்காணிக்கவும் பயன்படுகின்றன. பெரும்பாலான இயந்திர உபகரணங்கள் கூட கணினி வழியான கட்டளைகளுக்கு கட்டுப்படும் வகையில் மாறிவருகின்றன. இது செயற்பாட்டு ரீதியில் பல நன்மைகளை தந்தாலும் இதுவே இப்போது ஒரு புதிய பாதுகாப்பு சிக்கலையும் உருவாக்கியிருக்கிறது.

இதுவரை கணினிவழியான தாக்குதல்கள் கணனிகளை மட்டுமே குறிவைத்திருந்தன. இனி அப்படி இருக்கப்போவதில்லை. உதாரணமாக ஒரு ஆபத்தான இரசாயன உற்பத்தி தளத்தில் இருக்கும் முக்கியமான குழாய் ஒன்றை திறப்பதன் மூலம் பாரிய அனர்த்தத்தை உண்டுபண்ண முடியும். அதே வேளை அதை ஒரு விபத்து போலவும் காட்டிவிட முடியும். இது தொழிற்சாலைகள் மட்டும் என்றில்லாமல், இராணுவ அமைப்புக்கள், வங்கிகள், மற்றும் வேறு துறை நிறுவனங்களையும் வேவ்வேறு விதமாக பாதிக்க கூடிய ஒரு பிரச்சினை தான். இதுவே கணினிசார் போர்முறையின் முதல்படியாகவும் அமைகிறது.
இந்த பிரச்சினையின் அடிநாதமாக இருப்பது நாம் பொதுவாக பயன்படுத்தும் மென்பொருள்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகள். முக்கியமாக அதிக கணினிகளில் பயன்படுத்தப்படும் Microsoft இயங்குதளங்கள் மற்றும் இற்றைப்டுத்தப்படாத பழைய மென்பொருள்களில் இருக்கும் பாதுகாப்பு ஓட்டைகளும் இவ்வாறான கணினிசார் போர் முறை தாக்குதல்களின் அடிப்படை அம்சங்களாக அமைகின்றன.

இந்த வீடியோ பதிவில் கணினிசார் போர் முறைமை பற்றிய ஒரு அடிப்படையான அறிமுகத்தை பார்க்கலாம்.

இது எதிர் காலம் இல்லை, இது நிகழ்காலம்… இது கணினிசார் போர் முறைமைகள்…