பயணத் திகதி: நவம்பர் 23, 2010
நாம் நெல்சன் குடாவைச் சென்றடைந்த போது பகல் 12.30 ஆகியிருந்தது. அங்கிருந்த ஒரு மதுக்கடையில் இறைச்சியும் கிழங்கு சீவலும் பகலுணவாகியது. உண்ட களைப்புக்கு ஓய்வு கொடுக்காமல் நெல்சன் குடாவில் பிரபலமான கலங்கரை விளக்கிற்கு அடுத்ததாகப் பயணித்தோம்.
நெல்சன் குடா (Nelson Bay) ஸ்டீபன்ஸ் துறைமுகத்துக்கும் (Port Stephens) நியூகாஸிலுக்கும் (Newcastle) இடையில் உள்ள ஒரு சுற்றாலா நகரம். சுற்றுலாப் பயணிகள் மத்தியில் டொல்பின், திமிங்கில பயணங்கள், அலைச்சறுக்கு முதலான நீர் விளையாட்டுக்கள், மீன்பிடி போன்ற செயற்பாடுளுக்கு இந்நகரம் பிரபலமானது. இங்குள்ள கலங்கரை விளக்கு (Nelson Head Light) ஸ்டீபன்ஸ் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக 1872ல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவான கலங்கரை விளக்கங்கள் போல கோபுரமாக அல்லாது, உயரமாக குன்றின் மீது இருப்பதால் அங்குள்ள ஒரு கட்டடத்தின் யன்னல் வழியாகவே இங்கிருந்து வெளிச்சம் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது இது செயற்பாட்டில் இல்லாவிட்டாலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு அருங்காட்சியகமாக இது தொழிற்படுகிறது.


அங்கு சில புகைப்படங்களை எடுத்த பின்னர் நாம் சென்ற இடம் Gan Gan Lookout. 160மீ உயரமா இந்த குன்று ஸ்டீபன்ஸ் துறைமுக பிரதேசத்தில் உள்ள உயரமாக புள்ளியாக இருப்பதால் இந்த பிரதேசத்தை முழுமையாக பார்கக்கூடிய ஒரு இடமாக இது இருக்கிறது. ஒரு ஒடுங்கியா பாதையால் அந்த குன்றின் உச்சிவரை வாகனத்திலேயே செல்லமுடியும். அந்த பாதையின் ஆபத்தை உணர்த்தும் வகையில் உச்சியில் வானத்தை திருப்பும் இடத்தில் ஒரு கார் பாதையை விட்டு விலகி பள்ளத்துக்குள் விழுந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. மாலை நேரங்களில் இங்கிருந்து கடலைப் பார்ப்பது ஒரு ரம்யமான காட்சியாகவே இருக்க முடியும். ஆனாலும் நாம் சென்ற கண் கூசும் உச்சி வெய்யில் நேரத்தில் சில படங்களை எடுத்த பின்னர் கீழ் நோக்கி பயணிக்கலானோம்.




அடுத்த பதிவில் முன்றாம் நாள் முடிவில் சிட்னி நோக்கி பயணிக்கலாம்…