பயணத் திகதி: நவம்பர் 23, 2010
மூன்றாம் நாள் பனிக்குளிரில் முழுநிலா ஒளிர்ந்து கொண்டிருந்த அதிகாலை 4.30க்கு விடிந்தது. சற்றுத் தாமதித்தே புறப்படலாம் என்பதால் அன்று என்ன இடங்களைப் பாரக்கலாம் என்பதை முதல் நாள் சேகரித்திருந்த கையேடுகளில் இருந்து தெரிவு செய்தேன்.
காலை 5.45க்கு டாரியிலிருந்து தெற்காக பசிபிக் நெடுஞ்சாலையில் ஹண்டர் (Hunter) பிராந்தியத்தை நோக்கிப் பயணிக்கலானோம். ஹண்டர் பிராந்தியம் அல்லது ஹண்டர் பள்ளத்தாக்கு என்று அறியப்படும் இந்த பகுதி நியூ சவுத் வேல்ஸ் மாநிலந்தின் சிட்னிக்கு வடக்காக அமைந்துள்ளது.



எமது முதலாவது நிறுத்தம் ஹோக்ஸ் நெஸ்ட் (Hawks Nest). இது மாயல் ஏரிகளுக்கும் (Myall Lakes) ஸ்டீபன்ஸ் துறைமுகத்துக்கும் (Port Stephens) இடையில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஊர். நாம் டாரீயிலிருந்து 115கிமீ தெற்காக பயணித்து ஹோக்ஸ் நெஸ்ட் கடற்கரையை அடையும் போது நேரம் காலை 8.30. மிகவும் குறைந்த சனத்தொகையை கொண்டுள்ள இந்தப் பிரதேசம் பெரும்பாலும் விடுமுறை வீடுகளையும் ஓய்வுபெற்றொர் குடியிருப்புக்களையும் மட்டுமே கொண்டுள்ளது. தங்களுடைய வான்களிலேயே குடியிருந்து பயணிக்கும் பலரையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. அந்த கடற்கரையோரமாக காலை உணவை முடித்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.


எமது அடுத்த நிறுத்தம் ஹண்டர் பள்ளத்தாக்கு (Hunter Valley) பிரதேசத்தில் உள்ள பொக்கொல்பின் (Pokolbin). எமது பிரதான பாதையான பசுபிக் நெடுஞ்சாலையில் தெற்காக 70கிமீ நியூகாஸில் (Newcastle) வரை பயணித்து அங்கிருந்து 80 கிமீ மேற்காக பயணிக்க வேண்டும். ஆனால் நாம் GPS சொல் கேட்டு சென்றதால் சற்று மாறுபட்ட பாதையால் சென்றோம்.

நாம் சென்ற பாதை ரம்யமான பச்சை நிலங்களாலும் அமைதியான காடுகளாலும் இருமருங்கிலும் சூழப்பட்டிருந்தது. நாம் கடந்து சென்ற குரி குரி (Kurri Kurri), செஸ்நொக் (Cessnock) போன்ற சிறு நகரங்களில் பழைமையான பல கட்டடங்களையும் காணக்கூடியதாக இருந்தது. நாகரிக மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படாத இயற்கையோடு இணக்கமான பிரதேசமாக அது இருந்தது.



ஹண்டர் பள்ளத்தாக்கு திராட்சைத் தோட்டங்களுக்கும் வைன் உற்பத்திக்கும் பிரபலமான ஒரு பிரதேசம். நாம் நேரடியாக அங்கிருந்த தகவல் மையத்திற்கு சென்றோம். அங்கு வைன் சுவைக்கும் சுற்றுலாக்களில் வந்திருந்த பெருமளவான சீன சுற்றுலாப் பயணிகளை காணக்கூடியதாக இருந்தது. நாம் உலகில் எங்கு சென்றாலும் அங்கு சீனர்களை சுற்றுலா பயணிகளாக காண முடியும். சீன அரசு நாட்டின் சனத்தொகையை கட்டுப்படுத்த மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது என்று நண்பன் அருணன் சொன்னதில் உண்மை இல்லையென்றே நினைத்துக்கொண்டேன். அந்த தகவல் மையத்தில இருந்த பெண்மணியின் வீட்டுப்பிரச்சனை காரணமாக அவர் கடுப்பான மனநிலையில் இருந்ததால் அங்கிருந்து பயனுள்ள தகவல்கள் எதையும் பெறமுடியவில்லை. ஆனாலும் இங்கு வந்ததற்காக சில புகைப்படங்களை எடுத்துவிட்டு மீண்டும் வந்த பாதை வழியே எமது பயணத்தை தொடர்ந்தோம்.



அடுத்த பதிவில் நெல்சன் குடா…