பயணத் திகதி: நவம்பர் 22, 2010
கிறாப்டனில் இருந்து தெற்காக 80கிமீ பயணித்து நாம் கொப்ஸ் துறைமுகத்தை அடையும் போது பிற்பகல் 3 மணி ஆகியிருந்தது. மேகம் சூழ்ந்து மழை தூற ஆரப்பித்ததால் அங்கு சில படங்களை எடுத்து, சிறிது நேரம் உலாவிய பின்னர் பயணத்தை தொடர்ந்தோம்.
கொப்ஸ் துறைமுகம் (Coffs Harbour) நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலா நகரம். மலைகளாலும், தேசிய வனங்களாலும், அழகிய கடற்கரைகளாலும் சூழப்பட்டிருப்பதால் பெருநகரங்களிலிருந்து பலரையும் கவரும் ஒரு ஊராக இது திகழ்கிறது. சுற்றுலாத் துறையைத் தவிர வாழைப் பயிர்ச்செய்கையும் இங்கு ஒரு முக்கிய தொழிற்துறையாக இருக்கிறது.



நாம் மேலும் 50கிமீ தெற்காக பயணித்து மாலை 4 மணியளவில் Nambucca Headsஐ அடைந்தோம். நம்புகா நதியின் முகத்துவாரத்துக்கு அண்மையில் அமைந்த இந்நகரம் அலைச்சறுக்கு விருப்பிகளுக்கு பிரபலமானது. நாம் வந்த நேரத்தில் ஊர் மூடத்தொடங்கியதால் Captain Cook Lookout பகுதியில் சில படங்களை கிளிக்கிய பின்னர் எமது பயணம் தொடர்ந்தது.


இன்னுமொரு 110கிமீ பயணம், பசிபிக் நெடுஞ்சாலையில் மணிக்கு 110கிமீ வேகத்தில் நாம் Port Maquarieஐ அடைந்த போது நேரம் மாலை 7.30. கோடை காலம் என்பதால் இன்னமும் வெளிச்சம் இருந்தது. பசி எம்மை அழைத்ததால் அங்கிருந்த ஒரு தாய் உணவகத்தில் இரவுக்கு பசியாறினோம்.
பொர்ட் மகுவாறி (Port Maquarie) நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு பெரு நகரம். இது ஓய்வுபெற்றவர்கள் விரும்பி குடியேறும் ஒரு பிரதேசமாக குறிப்பிடப்படுகிறிது. 1879ல் அமைக்கப்பட்ட டக்கிங் பொயின்ட் கலங்கரை விளக்கம் (Tacking Point Lighthouse) இங்குள்ள ஒரு முக்கிய இடமாகும். அவுஸ்திரேலியாவின் மூன்றாவது பழைய கலங்கரை விளக்கம் என்று எமது கையேடு சொல்லியதால் அங்கு செல்வது என முடிவெடுத்து GPS இடம் சொன்னால் அது எம்மை அரைமணித்தியாலங்களுக்கு சுத்தலில் விட்டுவிட்டது.

இரவு 8மணிக்குப் பின்னர் வானம் மிகவும் இருட்டிவிட்டதால் அங்கிருந்து பயணத்தை தொடர முடிவுசெய்தோம். தெற்காக பசிபிக் நெடுஞ்சாலையில் முடிந்தவரை செல்லலாம் என்று 80கிமீ பயணித்து 9மணியளவில் டாரி என்னும் ஊரை அடைந்தோம். களைப்பும் தூக்கமும் நெடுச்சாலைப் பயணத்தின் எதிரிகள் எப்பதால் அந்த ஊரிலேயே இரவு தங்கினோம். இரண்டாம் நாளின் முடிவில் பயணித்த மொத்த தூரம் 802கிமீ, இரண்டாம் நாள் பயணித்த தூரம் 505கிமீ.
அடுத்த பதிவில் மூன்றாம் நாள்…