பயணத் திகதி: நவம்பர் 21, 2010

எமது பயணத்தின் முதல் நாளில் நாம் சென்ற முக்கியமான ஊர் நிம்பின். இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், பிரபலமான பைரன் குடாவிலிருந்து 70 கிமீ மேற்காக அமைந்துள்ளது. நிம்பின் தொழிற்துறை ரீதியாக பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் இருந்தாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ஒரு கிராமமாக திகழ்கிறது. இது அவுஸ்திரேலிய Bundjalung பழங்குடி மக்களின் பூர்வீக இடமா கருதப்பட்டாலும், தற்காலத்தில் மாற்று கலாச்சாரங்களுக்கான ஒரு மையமாக உருவெடுத்துள்ளது.

ஒரு பயணத்தின் படக்கதை - நிம்பின்

நிம்பின் அவுஸ்திரேலியாவின் ‘கஞ்சா தலைநகரமாக’ கருதப்படுகிறது. இங்கு கஞ்சாவின் ‘நேரடி’ விற்பனை இல்லாவிட்டாலும், கஞ்சா கலாச்சாரம்/ஹிப்பி கலாச்சாரம் சார்ந்த ஏனைய பொருட்கள் இலகுவில் கிடைப்பது பலர் இந்த ஊரை நாடிவர முக்கிய காரணம் என குறிப்பிடப்படுகிறது. இங்கு வருடாந்தம் நடைபெறும் கஞ்சா மாநாட்டிற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொள்வது இந்த ஊரின் பெருமையைச் சொல்கிறது.

Nimbin Village
நிம்பின் கடைவீதி. இங்கு ஒரு 10-15 நிமிடங்கள் நடந்து திரிந்தால் சொர்க்கத்தில் பறக்கும் சுகத்தை அனுபவிக்க நேரலாம்.
Nimbin H.E.M.P. Embassy
இந்த பிரதேசத்தில் கிடைக்கும் பல்வேறு போதைப்பொருள்/கஞ்சா சார்ந்த பொருட்கள் பற்றிய விபரங்களை இங்கு பெறலாம். 1973ல் நடைபெற்ற கஞ்சா மாநாட்டிலிருத்து இவர்களின் சேவை தொடர்கிறது.
Nimbin School Of Arts
1904ம் வருடம் திறக்கப்பட்ட நிம்பின் கலைப் பாடசாலை இந்த பிரதேசத்தின் முதலாவது பொதுக் கட்டடம். தற்போது இது ஒரு ஊர் மண்டபமாக பயன்படுகிறது.
Nimbin Visitor Information Centre
நிம்பின் விருந்தினர் தகவல் மையம். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு இந்த பிரதேசத்தை பற்றிய பொதுவான தகவல்களை வழங்கப்படும். இந்த ஊரில் புத்தர் கடும் பிரபலம், காரணம் தான் தெரியவில்லை.
Nimbin Environment Center
நிம்பின் சூழல் மையம், இந்த பிரதேசத்தின் சூழலை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு சமூக நிறுவனம்.
Nimbin Business Hours
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு கடை வாசலில் இருந்த திறந்திருக்கும் நேரங்கள் பட்டியல். இங்கு மக்கள் இருக்கும் 'நிலை' இதை வாசித்தால் புரியும்.
Nimbin Road
நிம்பினில் அதிக நேரம் தாமதித்தால் எங்களின் நிலை என்வாகும் என்பது தெரியாததால் நாம் மாலை மங்கும் நேரத்தில் அங்கிருந்து எமது பயணத்தை தொடர்ந்தோம்.

முதலாவது நாள் கிறாப்டன் நகருக்கு பயணிப்பதாக திட்டமிட்டிருந்தாலும், நிம்பின் நோக்கிய எமது பாதை விலகலால், இரவாகும் போது பைரன் குடாவிற்கு தெற்காக உள்ள பலீனா நகரில் தங்க முடிவெடுத்தோம். முதல் நாளில் 297கிமீ பயணம் செய்திருந்தோம். நாம் எடுத்துச் சென்றிருந்த பாணும் டூனாவும் எமது இரவு உணவாகியது.

அடுத்த பதிவில் யாம்பா…

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

4 replies on “ஒரு பயணத்தின் படக்கதை – நிம்பின்”

Comments are closed.