பயணத் திகதி: நவம்பர் 28, 2010
எட்டாம் நாள் மெல்பேர்னில் 7.30க்கு விடிந்தது. அருணனின் வீட்டுக்கு அண்மையில் இருந்த ஒரு McDonnald’sல் காலை உணவை முடித்த பின்னர், வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பச் சென்றோம். அங்கு ஒரு வாகனத்தோடு நான் எமது வாகனத்தை உராசி, அதை கதைத்து சமாளித்த பின்னர் Geelong நோக்கி செல்லலானோம்.
இன்று Great Ocean Road போவது என்று முடிவு செய்திருந்தாலும் எம்மிடம் சரியான திட்டம் இருக்காததால் Lara எனும் இடத்தில் இருந்த தகவல் நிலையத்தில் பொருத்தமான பயண வழி பற்றி கேட்டறிந்தோம். அவர்கள் Port Campbellல் தொடங்கி கிழக்காக பயணிப்பது பொருத்தமாயிருக்கும் என கூறினார்கள். அங்கிருந்து நாம் Geelong வரை தொடர்ந்து, Geelong கடற்கரையில் சில புகைப்படங்களை எடுத்து, சிறிது நேரம் உலாவிய பின்னர் பயணத்தை தொடர்ந்தோம்.


Great Ocean Road அவுஸ்த்திரேலிய விக்டோரிய மாநிலத்தில் இருக்கும் 243கிமீ நீளமான ஒரு பிரபலமான பாதை. முதலாம் உலகப் போர் நினைவாக கட்டப்பட்ட இந்த பாதை உலகின் பெரிய போர் நினைவிடமாகவும் இருக்கிறது. இந்த பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கியமான இடமாகவும் இது இருக்கிறது.



எமது Great Ocean Road பயணம் Port Campbellல் ஆரம்பித்தது. அங்கிருந்த ஒரு சிறிய உணவகத்தில் பகல் உணவை உண்ட பின்னர் Great Ocean Road வழியாக Twelve Apostles நோக்கி எமது பயணம் நகர்ந்தது.







மீண்டும் Great Ocean Road வழியே தொடர்ந்தோம். பல இடங்களில் பாதை அதிக வளைவுகளை கொண்டிருந்ததுடன் வேகக் கட்டுப்பாடும் இருந்தது. ஆனாலும் அருணன் பெரும்பாலான நேரங்களில் சயனத்தில் இருந்ததால், நான் வேகக் கட்டுப்பாடுகளை மதிக்காமல் வாகனத்தை செலுத்த முடிந்தது. அந்த நேரத்தில் அது சாதாரணமாக இருந்தாலும், இப்போது நினைத்தால் சற்று பயங்கராமாகவே இருக்கிறது. வழி வழியே சில இடங்களில் நிறுத்தி புகைப்படங்களை எடுத்தபடி பயணம் தொடர்ந்தது.



Great Ocean Road வழியே நாம் Apollo Bayஐ நெருங்கும் போது மாலையாகிருந்தது. வானமும் மேகமூட்டங்களால் நிறைந்திருந்தது. தொடர்ந்து அதே பாதையில் பயணிப்பது பொருத்தமானதாக இல்லாததால் நாம் மீண்டும் மெல்பேர்ன் நோக்கி பயணிக்கலானோம்.



வழியில் Glen Waverleyல் இருக்கும் Curry & Chips என்கிற இலங்கை உணவகத்தில் இரவு உணவு வாங்கிய பின்னர் வீடு திரும்பினோம். இன்று பயணித்த தூரம் 604.1கிமீ. இதுவரை பயணித்த மொத்த தூரம் 3290கிமீ.
அடுத்த பதிவில் மெல்பேர்னில் கடைசி இரண்டு நாட்கள்…