பிரிவுகள்
அனுபவம்

நாட்குறிப்பு 2001 – குறிப்பிடாத சில குறிப்புகள்

நான் தொடர்ந்து எழுதியது எனது நாட்குறிப்பு 2001 தொடர்பதிவுகளை ஏன் எழுதினேன் என்று பலரும் கேட்டார்கள், நானே அந்த கேள்வியை கேட்டிருக்கிறேன். காரணம் விசித்திரமானது.

சாதாரணமாக எப்போதாவது மட்டுமே பதிவுகள் எழுதும் நான் தொடர்ந்து எழுதியது எனது நாட்குறிப்பு 2001 பதிவுகளைத் தான். அதற்கு முக்கிய காரணம் நான் புதிதாக எதையும் எழுதவில்லை, நாட்குறிப்பில் எழுதியிருந்ததை தட்டச்சி பதிவிட்டேன். மாற்றங்கள் இல்லை, தணிக்கைகள் உண்டு.

நான் ஏன் இந்த பதிவுகளை எழுதினேன் என்று பலரும் கேட்டார்கள், நானே அந்த கேள்வியை கேட்டிருக்கிறேன். சிலகாலங்களுக்கு முன்னர் நான் பார்த்த ஒரு ஹிந்தி திரைப்படம் Bachna Ae Haseeno. ஏதோ ஒரு விமான பயணத்தில் பார்த்த ஞாபகம். சாதாரணமாக திரைப்படங்கள் என்னில் தாக்கம் செலுத்துவது மிகவும் குறைவு, ஆனாலும் இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்த்து. அந்த திரைப்படத்தின் பாதிப்பும் நான் இந்த பதிவுகளை எழுத முக்கிய காரணம்.

ஏன் என்றால், விடுபட்ட சில எண்ணக் குறிப்புகளை பதிவுசெய்து கொள்வதும்,அந்த குறிப்புகளை முன்வைத்து நான் கடந்த காலங்களில் செய்த சில தவறுகளைப் பதிவு செய்வதும்.

யாருக்காக என்றால், முதன்மையாக இது எனக்கானது. எனது திருப்திக்கானது. இந்த பதிவுகள் என் மனக்குழப்பங்கள் பலவற்றுக்கும் தெளிவு தருவதாக அமைந்தன. மேலும் சம்மந்தப்பட்டவர்களிடம் மட்டும் மன்னிப்புக் கேட்பது சாத்தியமானது தான். ஆனாலும் நான் செய்திருகக் கூடிய பல தவறுகள் பொதுவிலேயே செய்யப்பட்டன, அவற்றுக்கு பொதுவிலே மன்னிப்புக் கேட்பதே சரியானது.

முதலில்,
எனது தவறுகள் பலவற்றுக்கும் என் நண்பர்களை காரணமாக கருதியிருக்கிறேன். பல வருடங்களின் பின்னர் நினைத்துப் பார்க்கையில் அது எவ்வளவு அர்தமற்ற செயல் என்று புரிகிறது.

அடுத்து,
எனது தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலை எனக்கு இருந்ததில்லை. ஆனாலும் காலம் அந்த மாற்றத்தை எனக்கு தந்திருக்கிறது. எனது தொடர் பதிவுகளை வாசித்த பலரும் குறிப்பிட்ட ஒரு விடயம், ‘அவள்’ தான் நாம் பிரிந்ததற்குக் காரணம் என்பது. ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு எண்ணம். எனது நாட்குறிப்பு எனது நோக்கிலேயே எழுதப்பட்டதால் அவ்வாறு தோன்றியிருக்கலாம். ஆனால் உண்மையில் நான் தான் அவளைவிட்டு பிரிந்தேன். அந்த காதல் பிரிவில் முடிந்ததற்கு நான் தான் காரணம்.

அடுத்து,
எனது பொறுப்பற்ற செயற்பாடுகளால் ‘அவள்’ அந்த காலத்திலிருந்து மிகுந்த மன உளைச்சலுக்கு இதர கேலிப் பேச்சுக்களுக்கும் உட்பட்டிருக்கிறாள். அதற்கு சாதாரணாமாக ‘மன்னிப்பு’ என்று ஒரு வார்த்தை மட்டும் பரிகாரமாகாது. ஆனாலும் எனது மனபூர்வமான மன்னிப்பை இங்கு பதிவு செய்கிறேன்.

இறுதியாக,
தவறுகளுக்கு ‘மன்னிப்பு’ என்ற ஒரு வார்தை மட்டும் தீர்வாகாது. அது சம்மந்தப்பட்வர்கள் சார்ந்தது. ஆனாலும் நாம் மன்னிப்பு கேட்டோம் என்பதே மனத்திருப்தியை தர பொதுமானது.

(முற்றும்…!)