நேற்று நண்பர்கள் சிலர் Facebookல் பகிர்ந்திருந்த ஒரு பதிவு “யாழ்ப்பாண மாப்பிளைகளின் தற்போதய சீதன பெறுமதி நிலவரங்கள்“. இதற்கு வந்திருந்த பெரும்பாலான பதில்கள் சீதனம் வாங்குவது தவறு/பிழை/கேவலம்/அவமானம் என்ற தொனியிலேயே அமைந்திருந்தன. இதில் சில கருத்துக்கள் ‘லம்பாக சீதனம் வாங்குறதுக்காகவே நாங்க லவ் பண்ணுறதில்ல’ போன்ற உயரிய நோக்கங்களோடு வாழ்ந்து வரும் சில நண்பர்களிடம் இருந்தும் வந்திருந்தன.

சீதனம்: ஏன் தவறு இல்லை

நானும் பல சந்தர்ப்பங்களில் பொதுப்புத்தியில் கதைக்கும் போது சீதனம் தவறு என்ற கண்ணோட்டத்துடனேயே கதைத்திருக்கிறேன். ஆனாலும் சற்று நிதானமாக யோசித்தால் அது ஏன் தவறு இல்லை என்று தோன்றுகிறது.

எமது சமூகத்தில் திருமணம் என்பது குடும்பம் என்ற சமூக கட்டமைப்பை உருவாக்க மட்டுமே (Not for life, but just to create a family). இங்கு திருமணங்கள் ஒரு சமூக அங்கீகாரத்துக்காக, சமூகத்தில் மதிக்கப்படுதல் என்ற தேவைக்காகவே மட்டுமே பெரும்பாலும் செய்யப்படுகிறது. இதில் காதல், கத்தரிக்காய், அவரக்காய் எல்லாம் திருமணத்தின் பின் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும் என்பது எமது காலமான நம்பிக்கை.

திருமணங்களைச் சுற்றியிருக்கும் நம்பிக்கைளும் சமூக அங்கீகாரத்துக்காகவே. எட்டோ பத்தோ பொருத்தங்கள் இருத்தால் மட்டுமே திருமணம் என்ற கொள்கைகள் கூட, டொக்டர் மாப்பிள்ளைக்காக ஒன்றிரண்டு பொருத்தங்கள் குறையலாம் என்ற உப கொள்கை மூலம் சமன் செய்யப்படும். இங்கு டொக்டர் மாப்பிள்ளைக்கு இருக்கும் சமூக அங்கீகாரம் (மூட) நம்பிக்கைகளையும் முட்டாள் நம்பிக்கைகள் ஆக்கி விடுகின்றன.

இங்கு சீதனமும் ஒரு சமூக அங்கீகாரம் தான். ஊருக்குள்ளே யார் அதிகம் கொடுத்தது, யார் அதிகம் வாங்கியது என்ற போட்டிகளும், 10 வருடங்களின் பின் எந்த மாப்பிளைக்கு அதிகம் சீதனம் என்ற prediction மூலம் A/Lல Maths அல்லது Bio தெரிவு செய்வதும், இவை எல்லாமே இந்த சமூக அங்கீகார தேடலின் தொடர்ச்சி.

இப்படி சமூக அங்கீகாரத்துக்காக மட்டுமே திருமணம் செய்யும் நாம் சீதனம் வாங்குவதும் சமூக அங்கீகாரத்துக்காக எனும் போது அதில் தவறு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

(Post image uses a photo from jennifer könig, licensed under a Creative Commons Attribution license.)

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

30 replies on “சீதனம்: ஏன் தவறு இல்லை”

 1. கல்யாண வயசு வந்திட்டெல்லோ… இப்படித்தான் தோன்றும்!
  வாழ்த்துக்கள்!

 2. இன்றைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழரிடையே ஆண்களுக்கும் பெண்களுக்குமான விகிதாசாரம் பல்வேறு காரணிகளாலும் சமநிலையாயில்லாமல் இருப்பததனால் ஆணுக்கான தெரிவு அதிகமாக இருக்கிறது. ஆகையினால் அங்கே சீதனமும் தன் வாழ்ககைத்துணையிற்கான தேடலில் பிரதான இடம் பிடித்திருக்கின்றது என்பதே உண்மை. என்றைக்கு பெண்களின் எண்ணிக்கையிலும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக மாறி விடுகின்றதோ அன்றைக்கு இந்தச் சீதனப் பிரச்சனை தலைகீழாக மாறிவிடும்.

  1. விகிதாசாரம் என்பது எவ்வளவுக்கு காரணமாக இருக்கும் என்று தெரியவில்லை. இந்தியாவில் 900 பெண்களுக்கு 1000 ஆண்கள் என்று இருந்தும் இந்த பிரச்சனையில் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.

 3. முறையான (சட்டத்தின் படியான தெளிவான) விளக்கமிருந்தால் சீதனம் நல்லதொரு விடயம் என்றே சொல்லலாம்.

 4. சீதனம் வாங்காமல் விட்டுவிட்டு பிறகு வாங்கி நல்லா இருக்கிறவனைப் பார்த்துக் குமைஞ்சு “நான் மற்றவனை மாதிரி சீதனம் வாங்கியிருந்தால் எங்கேயோ போயிருப்பேன்” என்று காலம் பூரா வரப்போற மனிசிக்கு டார்ச்சர் குடுப்பதாயிருந்தால் அதை விட வாங்குவது மேல்.

  சீதனத்துக்கு ஆசைப்பட்டு “குணமான” பிள்ளையளை கட்டிப்போட்டு பிறகு அந்த மனிசியை ஏறெடுத்தும் பாராமல் “வடிவான” பெண்டுகளுக்கு பின்னால அலைஞ்சு செருப்படி படுவதாயிருந்தால் அதை விட வாங்காமல் விடுவது மேல் (செருப்படியையும்தான் .)

  அது சரி கலியாண வயசு வந்த உடன ஏன் இந்தக் காலத்துப் பெடியள் எல்லாரும் சீதனத்தை பற்றி கடுமையான விவாதத்தை தொடங்குரியள்? முதல் உங்களது மனதுக்கு பிடித்த ஒருத்தியை முடிவாக்குங்கோ. பிறகு சீதனம் தர விருப்பம் இருந்தால், அதை வாங்க மனம்/தேவை இருந்தால் வாங்குங்கோ. இல்லாவிட்டால் வங்க்காதேயுங்கோ. அதுக்கு ஏன் ரிவேர்ஸ் ஓடரில கவலைப் படுறியல்? (பிறக்கப் போற பிள்ளையளுக்கு சீதனம் குடுப்பதா இல்லையா என்றும் ஏதேனும் விவாதம் உங்க எங்கனயும் நடக்குதோ?)

   1. ஒகே… கலியாணம் தேவை இல்லை என்கிறியள். அப்ப நீங்கள் சீதனத்தை பற்றி ஏன் விவாதம்? விளங்கவில்லை…… கலியாணம் கட்டாமலே சீதனம் வங்க ஏதும் பிளான்? அட இது புதுசா இருக்கே 😉

    1. (ஆகா…) சமூகத்துக்காக கலியாணம் பண்றவங்க அதே சமூகத்துக்காக சீதனம் வாங்கிறதும் தப்பில்லை என்றது தான் நான் சொல்ல வந்தது. மற்றப்படி ரெண்டுமே தேவையில்லாதது என்றது தான் என்ட கருத்து.

     1. ஆக “சீதனம் ஏன் தவறு இல்லை” என்று தலைபில் “சீதனம் தேவை இல்லை” என்ற உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு விளங்கியதன் படி உங்கள் முக்கிய கருத்து “சமூகத்துக்காக” செய்வது தவறு என்பதுதான் போல் எனக்குப் படுகிறது.

      1) நீங்கள் வெளியில் போகும் போது எப்போதாவது பாவாடை கட்டிக் கொள்கிறீர்களா இல்லையே ஏன் கழிசான் மட்டுமே போடுகிறீர்கள்? சமூகத்துக்காகவா?
      2) எவ்வளவு தண்ணி விடாய் வந்தாலும் எப்போதாவது (மொரார்ஜி தேசாய் ஸ்டைல்இல்) கையிலோ ஒரு கப்பிலோ ஏந்தி குடித்திருக்கிறீர்களா? இல்லையே ஏன்? சமூகத்துக்காகவா?
      3) பசிக்கும் போது ஒரு மூலையில் குந்தினால் சுடச்சுட நல்ல வெஜிடரியன் சாப்பாடு கிடைக்கும் என்றிருக்க ஏன் கிச்சனுக்கோ அல்லது சாப்பாட்டு கடைக்கோ எப்பவும் ஓடுகிறோம்? ஏன்? சமூகத்துக்காகவா?
      .
      N) இப்படியே சமூகத்துக்காக நாங்கள் செய்யும் விடயங்களை பட்டியலிடலாம் (இப்பவே குமட்டுகிறது இத்தோடு விடுவம்)

      “சமூகத்துக்காக” இவ்வளவு விடயங்களை கண்ணை மூடிக்கொண்டு செய்கிற நீங்கள் அந்த “சமூகத்துக்காக” நடக்கும் கலியாணத்தையும் சீதனத்தையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறது மட்டும் என்னத்துக்காக? அதே சமூகத்துக்காக தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

 5. இந்த பதிவை நிச்சயமாக வரவேற்க முடியாது. சமூக அங்கீகாரத்துக்காக திருமணம் செய்வதே தவறு .இதில் சீதனம் வாங்குவது இன்னும் தவறு. சுருங்கச் சொல்வதென்றால் சீதனம் வாங்கி நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்வது என்பது “ஆண் விபசாரத்துக்கு ” சமம்

  1. //சமூக அங்கீகாரத்துக்காக திருமணம் செய்வதே தவறு. இதில் சீதனம் வாங்குவது இன்னும் தவறு .//

   அதை தானே நானும் சொல்லியிருக்கிறேன் (அல்லது சொல்லாமல் சொல்ல முயற்சித்திருக்கிறேன்)…!

 6. நிமல்,
  உங்கட இந்தப் பதிவு தொடர்பா ஒரு விசயத்த சொல்ல முடியும்.

  சமபாலுறவாளர்கள் தாம் திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்காக நிறைய நாடுகளில் போராடுகிறார்கள் (கனடாவில் அமெரிக்காவில் சில இடங்களில் அந்த உரிமை உண்டு). இது குறித்து எழுதுகிற ஒரு முற்போக்காளர் (கிட்டத்தட்ட இப்படி) எழுதியிருந்தார் “திருமணங்களே அவசியமற்றவை என்கிற போது இந்த போராட்டமே அவசியமற்றது”.

  நீங்களும் சீதனம் குறித்து “குடும்பமே சமூக அங்கீகாரத்துக்கானது.. இதில் சீதனம்” என எழுதியிருக்கிறீர்கள்.

  மேலே குறிப்பிட்ட முற்போக்கான கூற்றோடும் உங்களது கூற்றோடும் எனக்கு உடன்பாடே. நான் இரண்டையுமே தனிப்பட்டரீதியாக விரும்பவில்லை.

  ஆனால் சமூகம் என வருகிற போது, முற்போக்கான பல கருத்துக்களை அந்தந்த சந்தர்ப்பத்துக்கேற்ப பாக்க வேண்டிய தேவை உள்ளது.

  திருமண உரிமையை வேண்டிப் போராடும், சமபாலுறவாளர்களைப் பொறுத்தவரை திருமணம் செய்யும் தேர்வு அவர்களது அடிப்படை உரிமை. சீதனத்தை எதிர்க்கும் அதால் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது அவர்களது உரிமை.

  குடும்பம், திருமணம், வாரிசு அரசியல் என சகலமும் இருக்கிற இந்த உலகத்தில், சீதனப் பிரச்சினையால் பாதிக்கப்பட போவது நானோ அதை (மற்றும் திருமணத்தையே நிராகரிக்கிற) ஒரு முற்போக்காளரோ இல்லையே. அஃதால் பாதிக்கப்படுவது சாதாரணர்கள் தான்.

  சமபாலுறவாளர்கள் பல தேசங்களில் திருமணமற்று பற்பல காலம் இணைந்திருந்து, அவர்களது துணையின் (சடுதியான எதிர்பாராத) மரணத்தின் பின் துணையின் சொத்தின்பங்குகளை அவர்களது வாழ்வில் எந்த பங்கையும் வழங்கியிராத உறவினர் கைகளில் இழப்பவர்களாகஉள்ளார்கள். நடுறோட்டில் விடப்பட்டவர்களும் உள்ளார்கள். இப்படியிருக்க, திருமணம் அவர்களுக்கு அவசியமா இல்லையா?

  விரும்புகிறோமோ இல்லையோ, அங்கீகாரமோ இல்லையோ, இளமையை பாலுணர்வை திருமணத்தின் ஊடாக *மட்டுமே* அங்கீகரிக்கிற சமூக அமைப்பில், அப்படியல்லாத இடங்களில் தமது பாலுணர்வை அனுபவிக்கவியலாத பெண்கள், வறியவர்கள் என்பதால் சீதனப் பிரச்சினையால் திருமணம் செய்யாதிருப்பது யதார்த்தம் அல்லவா? அது யதார்த்தமாய் இருக்க மட்டும், திருமணத்தை குடும்பத்தை போட்டு உடைக்க எந்த அமைப்பும் பெரிதாய் வளர்ந்திராத பட்சத்தில்,
  நாம் சீதனத்தை எதிர்க்க வேண்டும் இல்லையா?

 7. தங்களுக்கு தாங்களே முற்போக்காளர் என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு அலையும் சிலர்
  1. “திருமணங்களே அவசியமற்றவை ” என்ற கருத்தை கொண்டிருப்பதையும்
  2. “இளமையை பாலுணர்வை திருமணத்தின் ஊடாக *மட்டுமே* அங்கீகரிக்கிற சமூக அமைப்பில்” என்ற ஆதங்கங்களை கொண்டிருப்பதையும் இன்று (தான்) அறிந்து கொண்டோம்.

  எனது கேள்வி, கற்காலத்தில் மனிதர்கள் இதை தானே செய்தார்கள். அப்படிப் பார்த்தால் “பிற்போக்கு வாதிகள்” என்று தானே உங்களை (நீங்களே) கூப்பிட வேண்டும். ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆ?

 8. ஹா ஹா…!! ஆயிரம் சான்றோர்களையும், அதற்கு மேலும் அதிகமான சுத்த தமிழர்களையும் வைத்து நிரூபிக்க வேண்டிய (கணிதத்தில சமன்பாடுகள் சமப்படுத்துவது போல) விஷயத்தை எவ்வளவு சுலபமா முடித்துவிட்டீர்ர்கள். இந்த வயதில, இப்போது மிக மிகத் தேவையான விவாதம் பாருங்கோ, நடத்துங்க, நடத்துங்க…!!

  1. நீங்க சொல்றது எனக்கு புரியேல்ல… அதைவிட நான் எதையும் தொடங்கவோ முடிக்கவோ இல்லை. என்ட கருத்துக்களை மட்டும் பதிவு செய்திருக்கிறன், அவ்வளவு தான்.

 9. வித்தியாசமான பதிவு. சீதனம் வாங்குவது பிழை என்பதுதான் என் கொள்கை. ஆனால், சீதனப் பிரச்சினைக்குப் பெண்களும்தான் காரணம். எந்தப் பெண்கள், “நற்குணமுள்ள, உழைத்துக் காப்பற்றக் கூடிய”, சீதனம் வாங்காத ஆணைக் கட்டுவார்கள்? (அவர் டொக்டர், இன்ஜினியர், etc இல்லாதவிடத்து). எல்லாருக்கும் டொக்டர், இன்ஜினியர், etc, etc தான் வேண்டும்.

 10. Dear all,
  I accept with what Sakthivel said. I really against person for the dowry system but all the girls are thinking that to give dowry will uplift their status .

  Theepan

 11. சீதனம் : ஏன் தவறு இல்லை ……?
  இந்த கேள்வியை மெத்த படித்துவிட்டு, வெளிநாட்டில் பனி அள்ளுபவனை கட்டி கொண்டு வாழும் பெண்ணை கேட்க வேண்டும் …!
  அல்லது ஓராம் ஆண்டு கூட சித்தியடையாமல் சீதனம் கொடுத்து phd மாப்பிளையை கல்யாணம் கட்டும் பெண்ணை கேட்டு பார்த்தால் விடை கிடைக்கும் …!
  முதலாமவர் தவறு என்பார்
  இரண்டாமவர் சரி என்பார் ……!

Comments are closed.