நேர்முகத் தேர்வு – சில குறிப்புக்கள்

(இது எனது அனுபவங்களில் இருந்து மட்டும் எழுதப்படவில்லை.)

தயார்ப்படுத்தல்:

 • உங்கள் சுயவிபரக்கோவை, இதர ஆவணங்கள், அவற்றின் பிரதிகள் என்பவற்றை முன்னரே தயாராக வைத்திருக்கவும். கேட்டால் பார்க்கலாம் என்று இருந்து சங்கடப்படுவதிலும் பார்க்க, கேட்கப்படாது என தெரிந்தாலும் தயாராக செல்வதே நல்லது. 
 • கேட்கப்படலாம் என எதிர்பார்க்கும் பொதுவான வினாக்களுக்கு தயார்ப்படுத்தலுடன் செல்வது நலம்.

ஆராய்ச்சி:

 • நீங்கள் செல்ல இருக்கும் நிறுவனத்தையும் அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் அடிப்படையாக தெரிந்து வைத்திருக்கவும். இதற்கு அவர்களின் இணையத்தளம் மற்றும் முக்கியமாக அங்கு ஏற்கனவே பணியில் யாராவது seniors/friends இருந்தால் அவர்களிடம் உரையாடுவது பயன்தரும். 
 • முக்கியமாக அவர்கள் என்ன பணிக்கு தெரிவுசெய்கிறார்கள், தெரிவு செய்யப்படுபவரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பவற்றை தெரிந்து வைத்திருப்பது எம்மை சரியான முறையில் வெளிப்படுத்த உதவும். அத்தோடு இவ்வாறு நிறுவனத்தை பற்றி தெரிந்து வைத்திருத்தல் நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையுடன் அணுகவும் உதவும்.

புறம்:

 • புறத்தோற்றம் ஒரு முக்கிய காரணி என்பதை நினைவில் நிறுத்தவும். ‘என் திறமைக்கு வேலை தந்தால் சரி’ என்ற பந்தாவை விடுத்து, பொருத்தமான ஆடை அணியவும். 
 • அந்த நிறுவனத்தில் வேலைக்கு சாதாரண ஆடை தான்(casual) அணிவதென்றாலும் நேர்முகத்தேர்வுக்கு பொருத்தமான professionally acceptable ஆடை அணிவது நலம்.

அகம்:

 • மேற்கூறியவற்றை சரியாக செய்திருந்தால், எமக்கு தானாக ஒரு தன்னம்பிக்கை வரும். ஆனாலும் அதையும் தாண்டி மனப்பயம் இருந்தால் அதை அதிகமாக வெளிக்காட்டுவதை தவிர்க்கலாம். ஆனால் அதற்காக over confident என்று act கொடுத்து மாட்டிக்கொள்ள கூடாது.

சுய ‘வியாபாரம்’:

 • நேர்முகத்தேர்வை ஒரு வியாபாரமாக பார்க்கவும், உங்களின் திறமைகளையும் அனுபவங்களையும் சரிவர வெளிப்படுத்தவும். உங்கள் அனுபவங்களை கூறும்படி கேட்டால், அந்த நிறுவனத்தில் செயற்பாடுகளுக்கு அவை உதவும் என தோன்றும் வகையில் அவற்றை தெரிவிக்கவும். 
 • அத்தோடு அவர்கள் “any question you want to ask us?” என்று கேட்டால், “ஏன் நீங்கள் product A ஐ விடுத்து product B யில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள்?” போன்றதான தொடர்புடைய கேள்விகளை கேட்பது உங்களின் தயார்படுதலையும் ஈடுபாட்டையும் வெளிக்காட்டும். (அதற்காக இல்லாத product பெயர் சொல்லி கேட்பது உசிதம் அல்ல)

பின் தொடர்பு:

 • நேர்முகத் தேர்வு முடிந்தது இனி அவர்களின் பதில் வரும் வரை காத்திருப்போம் என்றிருக்காமல், அவர்களுக்கு உங்களை நேர்முகத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அல்லது கடிதம் அனுப்பலாம். இதில் நேர்முகத் தேர்வில் நடைபெற்ற உரையாடலின் சுருக்கத்தையும் குறிப்பிடுவது உங்களை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்ட உதவும்.

தொடர் முயற்சி:

 • முதல் முயற்சி வெற்றியளித்தால் மகிழச்சிதான், இல்லாவிட்டால் அதை ஒரு அனுபவமாக கருதவும். இது உங்களின் அடுத்த நேர்முகத் தேர்வுகளின் இன்னும் தன்னம்பிக்கையுடன் முகம்கொடுக்க உதவும். தொடர் தயார்ப்படுத்தலும் தொடர் முயற்சியும் நிச்சயம் வெற்றியை பெற்றுத்தரும்.

இவை எனது அனுபவங்களிலும், வேறு பல சந்தர்ப்பங்களில் கேட்டவை, படித்தவை மட்டுமே. எனக்கு இதுவரை சரியான ஒரு நேர்முகத் தேர்வு அனுபவம் இல்லை… 🙂

வாழ்த்துகள்…!

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: job, interview, tips

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

2 replies on “நேர்முகத் தேர்வு – சில குறிப்புக்கள்”

 1. பின் தொடர்பு புதுசு மட்டுமல்ல மிகவும் பயனுள்ள விடையம்…நல்ல பதிவு… 🙂

Comments are closed.