துருக்கித் தொப்பி – ஒரு பயண அனுபவம்

இரண்டாவது முறையாக வெளிநாட்டு பயணம், இம்முறை இன்னும் இரண்டு நண்பர்களுடன். பயணத்தின் நோக்கம் பல்கலைக்கழக கருத்தரங்கொன்றில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் எமது இறுதி ஆண்டு செயற்திட்டம் (Project) பற்றிய ஒரு அறிமுக அளிக்கை (?) (Presentation) செய்வது. ஆனாலும் இதற்கு மேலதிகமாகவே இன்னும் பல இனிய அனுவங்களை இந்த பயணம் எமக்கு பெற்றுத்தந்தது. துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிய அந்த இனிய பயணத்தின் அனுபவங்கள் சில.

பயண ஏற்பாடுகள், புது தில்லியில் வீசா, presentation தயார்செய்தல் என பரபரப்பாக இருந்த ஒரு மாதத்தின் பின்னர், மே 8ம் திகதி கொழுப்பிலிருந்து எமது பயணம் ஆரம்பமாகியது. எமது விமானம் அதிகாலை 3 மணிக்கு என்பதால் இரவு 11 மணியளவில் நானும் ரமணனும் சயந்தனும் விமான நிலையத்தை நோக்கி பயணமானோம். உலகின் பாதுகாப்பான விமான நிலையங்களுள் ஒன்றாக கட்டுநாயக்க விமான நிலையம் இருப்பதால் அங்கிருந்த மூன்றடுக்கு பாதுகாப்பு, இரண்டு தடவை பயணபொதி சோதனை, ஒரு பஸ்பயணத்தை தாண்டி விமானநிலையத்துக்குள் நுழைய நள்ளிரவு 12 மணி ஆகியிருந்தது.

நான் முதலிலேயே ஒன்லைன் Check-in செய்திருந்த படியால் எமக்கு ‘தனி வரிசை’. எமது பயண பொதிகளை ஒப்படைத்து விட்டு கடவுச்சீட்டு கட்டுப்பாட்டு பகுதிக்கு நாம் வரும்போது நேரம் 12.30. துருக்கிக்கு கொழும்பிலிருந்தே நேரடி விமானங்கள் பயணிப்பதில்லையாதலால் துபாய், கட்டார் அம்மான் போன்ற ஏதாவது ஒரு விமானநிலையத்தினூடான இணைப்பு விமானங்களிலேயே பயணிக்க முடியும். நாம் துபாய் ஊடகவே எமிரேட்ஸ் விமானமொன்றில் பயணிக்க இருந்தோம். சுங்க சோதனை பகுதியில் சந்திந்த டோகா செல்லும் ஒரு நண்பரும் டுபாய் வரையான பயணத்தில் எம்முடனேயே இருந்தார்.

1 மணியளவில் சுங்க சோதனைகளை முடித்துவிட்டதால் 3 மணிக்கு விமானமேறும் வரை விமான நிலையத்தில் இலவசமாக கிடைத்த இணைய வசதியை பயன்படுத்தி Facebook, Twitter என அனைத்து தளங்களிலும் எமது இருப்பை பதிவு செய்து கொண்டோம். இரவு 2 மணி ஆகா லேசாக பசியெடுக்க ஆரம்பித்திருந்தது. விமானநிலையத்திலிருந்த ஒரு உணவகத்தில் (குறைந்த விலைக்கு) கிடைத்த வெஜிடபிள் பர்கரை வாங்கி எமது அரைப்பசியை முழுமையாக தீர்த்துக்கொண்டோம்.

தொடரந்த எங்கள் ஒரு வார பயண அனுபவத்தை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.