வாரம் ஒரு பாட்டு 1 – வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்

வலைபதிய தலைப்புக்களுக்கு பஞ்சமாக இருக்குது, இருக்கிற தலைப்புக்களிலும் எழுத அலுப்பாக இருக்குது. ஆனபடியால் இந்த வாரத்திலிருந்து (அப்பப்ப) பாட்டு போட்டு அலுப்படிக்கலாம் எண்டு இருக்கிறன்.

முதல் சில வாரங்களுக்கு நாங்கள் உருவாக்கிய பாட்டுக்களை தான் தர நினைத்திருக்கிறேன். பின்னர் முடிந்தால் இதர இலங்கை பாடல்களையும் (முறையான அனுமதியுடன் 🙂 ) தரலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

இனி இந்த வார பாடலுக்கு போகலாம்…

பாடல் : வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்
இசைத்தொகுப்பு : முதல் சுவடு
பாடியோர் : அருணன், சிந்துஜன்
பாடல்வரிகள் : சிந்துஜன்
இசை : றீக்ஸ், அருணன்
ஒலிப்பதிவு, தயாரிப்பு : நிமல் 🙂
வெளியீடு : ஈ-பனை கலையகம்

பாடசாலை வாழ்க்கை எல்லோருக்கும் இனிமையானது. இப்போது பல்கலைக்கழகம், வேலை என்று இருந்தாலும், புதிய நண்பர் வட்டங்கள் உருவானாலும், பாடசாலை கால நட்புகள் வித்தியாசமானவை என்றே எண்ணத்தோன்றுகிறது.

இந்த பாடலும் எமது பாடசாலை வாழ்க்கையின் இறுதி வருடத்தில் உருவானதே. நட்பின் ஆழத்தை காட்டிலும் அகலத்தை உணர்ந்த நாட்கள் அவை. இனிவரும் காலங்களின் அதே நட்புடன் வாழ்க்கை பாதையில் பயணிக்கும் கனவுடன் எழுந்த பாடல் இது.

பாடசாலை நண்பர்கள்

இன்று 4 வருடங்களின் பின் எண்ணிப்பார்க்கிறேன்… இப்போது நாம் (பாடசாலை நண்பர்கள்) அரிதாகவே சந்திக்கிறோம். இப்போதும் இலங்கையில் இருக்கும் நண்பர்களை காண வெள்ளிக்கிழமைகளில் ‘கோயில் வாசல் வரை’ போகிறேன். மற்றவர்களுடன் அவ்வப்போது ஒரு email, Facebook wall post எழுதுகிறோம், எப்போதாவது Skype, GTalk இல் கதைக்கிறோம்.

இந்த பாடலை பாடும் அருணன் இப்போ மெல்பேர்ன் அவுஸ்திரேலியாவில், சிந்துஜன் இப்ப டியான்ஜின் சீனாவில். ஆனாலும்… நாங்கள் இப்போதும் நண்பர்கள் தான்…!!!

வாழ்வின் இறுதிவரை நீடித்தால் தான்
உண்மை நட்பென்று ஆகிடுமே…

பாடல் வரிகள்:

வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்
அதில் காண்பதற்கு பல இடமுண்டு
அதைக் கண்டு நாமும் பலனடைவோமே
இனி சண்டைகள் ஏன் சகோதரா?
அன்றுமுதல் இன்றுவரை
உருவம் மாறலாம்
நம் நட்பு மாறுமா
சொல் நண்பா…

நட்பில் உருவான நம் சொந்தம்
என்றும் தரும் நிலையான சொர்க்கம்
உப்பில்லா பண்டம் குப்பையிலே
நட்பில்லா வாழ்வு நரகமே!

நட்பை நீ என்றும் கொண்டாடு
கல்லூரி முடிந்தால் முடிவதில்லை
வாழ்வின் இறுதிவரை நீடித்தால் தான்
உண்மை நட்பென்று ஆகிடுமே…

ஒரு வெற்றி காண நீ போராடு
உன் கையில் உண்டு எதிர்காலமே
நாளைய தலைவன் நீ என்று
வா… வா… தோழனே முன்னேறு!

உங்களின் அன்பான / அதட்டலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 😉

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

5 replies on “வாரம் ஒரு பாட்டு 1 – வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்”

  1. நிமல்அலுப்படிக்கப் போறனெண்டு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லக்கூடாது ;-)நல்லாயிருக்கு இந்தப் பாட்டு, வானொலியில் ஒலிபரப்புவதற்காக இதையும், இன்னும் இருந்தாலும் மின்னஞ்சலில் அனுப்புவீர்களா?kanapraba@gmail.com

  2. பாடல் அருமை . . .அதுவும் நாட்டையும் நண்பர்களையும் பிரிந்து வந்துள்ள இத்தருணத்தில் இப்பாடலைக்கேட்கும் போது இன்னும் மனம்கனக்கிறதுநட்பு நட்பு தான்நன்றியுடன் மாயா

Comments are closed.