தமிழ் ராப் (சொல்லிசை) பாடல்கள் மொழியையும் உணர்வையும் சிதைக்கும் ஒரு இசை வடிவம் என சிலர்(பலர்) சொல்ல கேட்டிருக்கிறேன். இதை முழுவதும் தவறான கூற்று என மறுக்கும் எண்ணத்தில் நான் இல்லை. ஆயினும் ராப் பாடல்களை அதிகம் விரும்புவதாலோ என்னவோ, இக்கூற்றுடன் உடன்பட முடியவில்லை. (தமிழ்) ராப் பாடல்களை பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே இந்த பதிவு (முடிந்தால் தொடர் பதிவுகள்).
தமிழில் ராப் இசைவடிவத்தை யார் முதலில் பயன்படுத்தினார்கள் என்ற வரலாற்று ஆராய்ச்சி இங்கு தேவையற்றது, சமகால ராப் பாடல்களை உதாரணமாக கொண்டே இந்த பதிவை எழுதுகிறேன். (ஆகவே இதை selective என்றும் சொல்லலாம் அல்லது filtering என்றும் சொல்லலாம்). இங்கு நான் ராப் பாடல்கள் என்பது ‘முழுமையான’ ராப் பாடல்கள், ஆங்காங்கே நான்கு வரி ராப் ‘தூவப்பட்ட’ பாடல்கள் அல்ல.
காதல் பாடல்கள் என்பது திரை இசை பாடல்களிலும் பிற தமிழ் பாடல்களிலும் மிகவும் அதிகமாக வரும் பாடல்கள் எனலாம். இப்பாடல்களின் வரிகளும் உணர்வுகளுமே அவற்றை முழுமையான காதல் பாடல்களாக ஆக்குகின்றன. இவ்வாறு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் காதல் பாடல்களை ராப் இசை வடிவில் கொடுக்க முடியுமா? முடியும் என்பதற்கான சில உதாரணங்களை காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.
1. காதல் கடிதம்
பாடியோர் : கிரிஷான் மகேசன், யௌவனன் (இலங்கை)
இசைத்தொகுப்பு : Asian Avenue
காதலை சொல்லும் வரிகள். வரிகளில் தெளிவும் எளிமையும். பாடும் வரிகள் புரிகின்றன. ராப் பாடல்களின் சிறப்பு பாடுபவர்களே வரிகளை எழுதுவது. தங்களின் வரிகளை தாங்களே பாடுவது. உச்சரிப்பில் குறை எதுவும் சொல்வதற்கு இல்லை. ஆங்கிகலப்பு சற்றும் இல்லை, ஆனாலும் கேட்பதற்று நன்றாகவே இருக்கிறது.
டியூனுக்குள் அடக்க ஆங்கில சொல் சேர்ததாக கூறும் திரை கவிஞர்கள் இதை கேட்டு பார்க்கலாம்.
‘உன் கண்ணில் மர்மமோ, ஒரு பார்வையில் கவர்ந்தாய் தர்மமோ…’
‘நீ எனை அறியாய், என்னைப்பற்றி தெரியாய்,
உன் மேல் நான் கொண்ட நேசம் பற்றி தெரியாய்…’
2. காதல் எங்கே…
பாடியோர் : Yogi B, Dr Burn, Mc Jesz (மலேசியா)
இசைத்தொகுப்பு : வல்லவன்
தமிழ் திரை பாடல்களை கேட்பவர்களுக்கு அறிமுகமான மூவர். தமிழ் ராப் பாடல்கள் இப்படியும் இருக்கலாம் என்று செய்து காட்டியவர்கள். முக்கியமாக Dr Burn தமிழ் வரிகளை சிறப்பாக கையாள்வதாகவே தோன்றுகிறது. இந்த பாடலில் சற்றே ஆங்கில கலப்பு இருத்தானும், விகுதிக்கு மட்டும் தமிழ்தடவி எழுதும் கவி அரசுகளை விட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
‘பெண்ணே என் மனதில் காயம்,
எல்லாத் நீ செய்த பாவம்,
காதல் என்ற வார்த்தை மாயம்,
உன் காதல் எங்கே பெண்ணே நீ சொல்ல வேண்டும்…’
3. பூவரசம் பூ
பாடியவர் : சுஜித் ஜீ (லண்டன்)
யாழ்ப்பாணத்து தமிழ் உச்சரிப்பில் ராப் பாடல் கேட்க ஆசைப்படுபவர்களுக்கு இந்த பாட்டு நிச்சயம் பிடிக்கும். வரிகள் சில இசைக்குள் புதைந்துவிடுகின்றன். வரிகள் சற்று பொதுவானவையாக இருக்கின்றன. ஆனாலும் பாடல் கேட்க நன்றாக தான் இருக்கிறது. ராப் என்பது தமது எண்ணங்களை தமது வரிகளால் பாடுவது. அதற்கமைய இதுவும் வித்தியாசமாகவே இருக்கிறது. உரில் அதிகம் காணும் பூவர மரத்தை பாடலில் கொண்டுவந்தது வித்தியாசமாக இருக்கிறது. ஆனாலும் பூவரசம் பூ எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
‘பூவரசம் பூவே நீதான் என் ஜீவரசம்..’
‘என்னத்த சொல்லி நான் என்னத்த செய்ய,
காதல கடையில சொல்லவா செய்ய.
பழம் நழுவி பாலில் விழும் எண்டு பாத்தா,
பழம் இல்லாம பாலும் பழம் பாலா போச்சே…!’
இன்னும் எத்தனையொ தமிழ் ராப் காதல் பாடல்கள் இருக்கின்றன. இந்த பதிவின் நோக்கம் உணர்வுக்கும் மொழிக்கும் களங்கமில்லா தமிழ் ராப் பாடல்களை கொடுக்க முடியும் என்பதை சொல்லவே. ராப் பாடல்கள் எல்லாமே இவ்வாறு நல்லவை என்று சாதிக்கும் எண்ணம் எனக்கில்லை. ஆனால் நல்லவற்றை விடுத்து தீயவற்றை மட்டுமே வடிகட்டும் ‘திறனுள்ள’ அன்பர்களுக்கு, “நீங்கள் அப்படியே இருங்கள்…! :)”.
பாடல்களை கேட்டுப்பாருங்கள். கருத்துக்களை பின்னூட்டத்தில் கூறுங்கள். நான் தான் சரி என்றில்லை, ஆகவே எனது கருத்துக்களில் பிழை இருந்தால் கூறுங்கள். திருத்திக்க்கொள்கிறேன்.
மீண்டும் சந்திக்கலாம்…
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
பி.கு : இந்தியாவிலிருந்து திரை இசை தவிர்த்த தமிழ் ராப் பாடகர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.
Tags: தமிழ் ராப், music, rap music, tamil rap
சுஜீத் ஜீயின் பாடல்கள் அனைத்திலும் ராப் இடையில் வந்து போகும். நம்மட வானொலிகள் தொலைக் காட்சிகளில் கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால் முன்னுக்கு வரலாம்.
//சுஜீத் ஜீயின் பாடல்கள் அனைத்திலும் ராப் இடையில் வந்து போகும்.//எனக்கு ஏனோ ராப் இடையில் வந்து போகும் பாடல்களில் அவ்வளவு விருப்பம் இல்லை. இருந்தாலும் சுஜீத் ஜீயின் பாடல்கள் நல்லாகவே இருக்கின்றன. //நம்மட வானொலிகள் தொலைக் காட்சிகளில் கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால் முன்னுக்கு வரலாம்.//எங்கள் வானொலிகளை பற்றி சொல்லி வேலையில்லை…அவர்களில் சிலர் பாடல் பிரபலமான பின்னர் தான் ஒலிபரப்புவோம் என்று எனக்கு நேரே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பிரபலமாக்குவதற்று ஒலிபரப்ப மாட்டார்கள். அவ்வாறு சொன்னவர்களில் ஒருவர் அண்மையில் வலைப்பதிவாளராகவும் ஆகியிருக்கிறார். (யாரெண்டு சொல்ல மாட்டன்)
//மொழியையும் உணர்வையும் சிதைக்கும் ஒரு இசை வடிவம் என சிலர்(பலர்) சொல்ல கேட்டிருக்கிறேன்//இவற்றை கேட்க முயற்ச்சித்த போது எனது உணர்வும் இதுவே. ஆனால் புதிய தலைமுறைக்கு எனது உணர்வை திணிக்க முடியாது என உணர்ந்துள்ளேன்.ஒரு மொழிக்கென்று தனித்துவமான இயல்பு இருக்கின்றது என்பது எனது உணர்வு. தமிழ்மொழிக்குள் இந்த இசைவடிவம் இயல்பாக உருவாக முடியுமா என்றால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இருந்த போதும் புலம்பெயர் நாடுகளில் வேகமாக விரிந்த தமிழ்ச்சமூகத்தின் புதிய தலைமுறையின் பேச்சுவழக்கு புதியதொரு வடிவத்தை பெறுகின்றது. அந்த வடிவம் அவர்களுக்கு காலப்போக்கில் இயல்பாகின்றது. மொழி தன் இயல்பை விரிவாக்குகின்றது என்பது ஆரோக்கியம் இழக்கின்றது என்பது பரிதாபம் எனவே இவற்றை இந்த இசைவடிவ உருவாக்குனர்கள் கவனத்தில் எடுப்பது சிறந்தது.
//தமிழ்மொழிக்குள் இந்த இசைவடிவம் இயல்பாக உருவாக முடியுமா என்றால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.//கர்நாடக(கருநாடக) இசை வடிவம் இன்று தமிழிசையை தாழ்த்தி தமிழனின் இசையாக மாறியுள்ளது சரி என்றால் இதுவும் சரி என்பது தான் எனது கருத்து.தனது சமூகத்தின் பேச்சு வழக்கிற்கு மிகவும் முறணான எழுத்து வழக்கு நிலைத்திருக்காது. (எனக்கு சங்க இலக்கிய பாடல்கள் விளங்காதது எனது தப்பில்லை என்று நினைப்பவன் நான்).ஆனாலும் ராப் இசை கலைஞர்கள் மொழியில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.நர்மதா உங்களின் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
அவர்களில் சிலர் பாடல் பிரபலமான பின்னர் தான் ஒலிபரப்புவோம் என்று எனக்கு நேரே சொல்லி இருக்கிறார்கள்.//:(அப்படியானால் வானலைகளில் முந்திக்கொண்டு இலங்கை வானொலிகளிலேயே முதற்தடவையாக பாடல்களைத் தரும்போது அந்த பாடல்கள் ஏற்கனவே பிரபலமான பாடல்களாமோ ?
//அப்படியானால் வானலைகளில் முந்திக்கொண்டு இலங்கை வானொலிகளிலேயே முதற்தடவையாக பாடல்களைத் தரும்போது அந்த பாடல்கள் ஏற்கனவே பிரபலமான பாடல்களாமோ ?//எண்டு அவை சொல்லுறத நாங்க நம்பத்தான் வேணும்.. !!
தமிழ் ரப் பாடல்களில் Suresh Da Wun பாடிய ராமா ராமா பிடித்திருக்கிறது! http://www.youtube.com/watch?v=y1aFBEZjMZMதமிழை இந்த பாட்டில் ஆங்கிலம் அதிகம் கலக்காமல் வடிவாக கையான்றிருக்கிறார்கள். தமிழ் ராப் – காதல் பாடல்கள் – சாத்தியமா? என்று என்னை கேட்டால் சாத்தியம் என்றுதான் கூறுவேன்!. எல்லாம் மொழியை கையாழ்வதை பொறுத்துதான் இதன் வெற்றி இருக்கின்றது!!! மற்றது பூவரச மரம் (Thespesia populnea) பூவைபாக்கவேண்டுமாயின் இதோ விக்கிபீடியாவின் சுட்டி. http://en.wikipedia.org/wiki/Thespesia_populneahttp://www.youtube.com/watch?v=y1aFBEZjMZM
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் NONO..!Suresh Da Wun இன் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். முடிந்தால் அடுத்த பதிவுகளில் அவரின் பாடல்களையும் சேர்த்து பார்க்கலாம்.பூவரசம் பூவை காட்டியதற்கும் விசேட நன்றிகள் 😉
தகவலுக்கு நன்றி.தமிழ் ரப் பாடல்கள் நன்றாக இருந்தன.-சந்திரன்
அருமையான பாடல்களின் அறிமுகத்திற்கு நன்றி 🙂
நல்ல பதிவு நண்பா..//தமிழ் ராப் (சொல்லிசை) பாடல்கள் மொழியையும் உணர்வையும் சிதைக்கும் ஒரு இசை வடிவம் என சிலர்(பலர்) சொல்ல கேட்டிருக்கிறேன். இதை முழுவதும் தவறான கூற்று என மறுக்கும் எண்ணத்தில் நான் இல்லை.//உங்கள் கருத்தும் என் கருத்தே. நீங்க மூன்றூ பாடலுடன் நிறுத்திட்டீங்க..நான் கொஞ்சம் இந்த லிஸ்ட்ல சேர்க்கலாம்ன்னு இருக்கேன்..சசி The Don – அன்பே அன்பேBoomerangX – கனவே கனவேChakrasonic – ஏதோ மோகம்Crashveenah – மீனா மீனாLock Up – காற்றேஅன்புடன்,.:: மை ஃபிரண்ட் ::.Reshmonu – பிரிவு
Thanks for post. do you know from which site we can get tamil rap songs?
@Thooya நன்றி…!@அனானிசுஜீத் ஜீயின் பாடல்கள் <a href="http://www.sujeethg.com/http://www.sujeethg.com/<br />மற்றவை YouTube or Google search… 🙂
@.:: மை ஃபிரண்ட் ::.மூன்று பாடல் ஒரு சாம்பிளுக்கு தான்…நீங்கள் குறிப்பிட்ட பாடல்களையும் கேட்டிருக்கிறேன். தமிழ் ராப் எனும்போது மலேசியா முதன்மை பெறுகிறது என்பது உண்மையே…!
//தனது சமூகத்தின் பேச்சு வழக்கிற்கு மிகவும் முற(ர)ணான எழுத்து வழக்கு நிலைத்திருக்காது. (எனக்கு சங்க இலக்கிய பாடல்கள் விளங்காதது எனது தப்பில்லை என்று நினைப்பவன் நான்).//நல்ல கருத்து, இதை வழிமொழிகிறேன். சங்க இலக்கிய பாடல்களில் இந்த பிரச்சினை எனக்கும் இருந்தது. ஆனால் பேச்சு வழக்கிலிருந்து விலகி பல அருஞ்சொற்கள் அழிந்து வருவதுதான் நெருடலான விடயம்
//அவர்களில் சிலர் பாடல் பிரபலமான பின்னர் தான் ஒலிபரப்புவோம் என்று எனக்கு நேரே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பிரபலமாக்குவதற்று ஒலிபரப்ப மாட்டார்கள். அவ்வாறு சொன்னவர்களில் ஒருவர் அண்மையில் வலைப்பதிவாளராகவும் ஆகியிருக்கிறார். (யாரெண்டு சொல்ல மாட்டன்)//
நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த ஒலிபரப்பாளர் யாரென்று எனக்கும் தெரியும்.. 🙂 ஆனால் அவர் சொன்ன விடயத்தை தவறாகப் புரிந்துள்ளீர்கள்..
அவர்சொன்னது.. ஒரு தடவை,இரு தடவை ஒலிபரப்பி மக்கள்,நேயர்களால் அடிக்கடி விரும்பிக் கேட்கப்பட்டால்,தொடர்ந்து ஒலிபரப்புவேன் என்றுதான் அவர் சொல்லி இருக்கிறார்.இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் சொல்லிவிடச் சொன்னார்.. இலங்கையில் தனியார் வானொலிகளில் தமிழ் ராப் இசைப்பாடல்கள் மட்டுமல்லாமல் அனைத்து உள்ளூர்ப் பாடல்களையும் அதிகளவில் அறிமுகப்படுத்தியவர் அவரே தானாம்.
Asian avenue- Krishan,அவரது சகோதரர் கஜன்,பிரபலRapper இராஜ் (இந்த இரு சகோதரரும் வெளிவரக் காரணமானவர்) ஆகியோரை முதலில் அறிமுகப்படுத்திப் பேட்டி கண்டவரும் இவரே தானாம்.இப்போதும் உள்ளூர் பாடகர்கள் யாரையும் கேட்டுப் பார்க்க சொன்னார்.. சூரியனில் முன்னரும்,இப்போது வெற்றியிலும் தென் இந்தியத் திரைப் பாடல்களுக்கு இணையாக எங்கள் நாட்டுப் பாடல்களும் ஒலிக்கின்றன.காரணம்??
இவரது தனிப்பட்ட கருத்து – உள்ளூர் பாடல்கள் என்று தனியாக ஒதுக்கி வேறாக ஒலிபரப்பாமல்,அவற்றோடு சேர்த்தே தந்து நம் நேயர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.
வெகு விரைவில் தன்னுடைய பதிவு ஒன்று இது பற்றித் தருவார் என எதிர்பார்க்கலாம்
p.s ஒரு காலத்தில் சொல்லப்பட்ட முந்திக் கொண்டு முதலில் வழங்கும் தம்பட்ட செயற்பாடுகள் இப்போது வெற்றி FMஇல் இல்லை.. 😉
லோஷன் அண்ணா,உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.கிறிஷான், கஜனின் பாடல்களிள் சூரியனில் ஒலிபரப்பப்ட்டதும் பேட்டி கண்டதையும் நான் அறிவேன்.//இவரது தனிப்பட்ட கருத்து – உள்ளூர் பாடல்கள் என்று தனியாக ஒதுக்கி வேறாக ஒலிபரப்பாமல்,அவற்றோடு சேர்த்தே தந்து நம் நேயர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.//அவ்வாறு நடக்குமாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி…