ஆர்த்தர். சி. க்ளார்க் – Arthur. C. Clarke

சோகமாய் உணரவில்லை…
ஏனென்றால் நடந்திடக் கூடாத ஒன்று இல்லை என்பதால்…
இழப்பென்று எண்ணவில்லை…
ஏனென்றால் அதிகமாகவே எமக்கு அளித்துச் சென்றிருப்பதால்…

நிஜங்களின் நிழல்களை நிதர்சனமாய் சொன்னவன் நீ…
நிழல்களாகிவிட்ட உன் நினைவுகளுக்கு என் வணக்கங்கள்..!

:

:

இவண்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

ஆஹா FM இல் பாலேந்திரன் காண்டீபன்

எமது பாடல்கள் முதன் முதலாக வானலைகளில் ஒலிக்க காரணமா இருந்தவர் காண்டீபன் அண்ணா. அவருடனான நட்பு காலத்தால் குறுகியதானாலும், மிகவும் இனிய நண்பர். வேண்டும் வேளைகளில் உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குபவர். தனது அறிவிப்பால் இலங்கை நேயர்களின் மனதை கொள்ளைக் கொண்டவரும் தற்போது இந்தியாவின் ஆஹா FM இன் அறிவிப்பாளராக பணிபுரிந்து வருபவருமான பாலேந்திரன் காண்டீபன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணல். நீண்ட நாட்களுக்கு பின் அவரைப்பற்றி அறிய கிடைத்தது, அதை மற்றவர்களுடனும் இங்கு பதிவதன் மூலம் பகிர்கிறேன்.

செய்தி மூலம்: வீரகேசரி
நேர்காணல்: கா.பொன்மலர்

“இலங்கையில் தரமான தயாரிப்பாளர்கள் தரமான நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் இவர்களை ஊக்குவிக்க யாரும் முன்வருவதில்லை. இது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் . இந்நிலை மாறினால் மட்டுமே இலங்கை ஊடகத் துறையில் ஆரோக்கியமான வளர்ச்சியை எதிர் பார்க்கலாம் இந்தியாவின் ஆஹா FM இன் அறிவிப்பாள ராக பணிபுரிந்து வருபவரான பாலேந்திரன் காண்டீபன் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி: ஊடகத்தில் அறிவிப்பாளராக உங்களது அறிரிகம் எப்படி ஏற்பட்டது?

பதில்: எனது ஊடக பிரவேசத்திற்கு முதல் காரணம் பாடசாலைதான். நான் முதல் படித் தது இசிபதான கல்லூரி.அதன் பின்னர் றோயல் கல்லூரி. அந்தக்கால கட்டத்தில் பேச்சுப் போட்டிகள், விவாதப்போட்டிகள் என்பவற்றில் அணித் தலைவராக இருந்துள்ளேன்.

இதுதவிர கவிதைப்போட்டிகள் என்பவற்றில் எனது திறமைகளை வெளிப்படுத்தியதுடன் கல்லூரி மட்டத்தில் சிறந்த பேச்சாளர், சிறந்த விவாதி என்ற அடிப்படைத்தகுதியை பெற்றுக் கொண்டதால் ஊடகத்துக்குள் இலகுவாகப் பிர வேசிக்கக்கூடியதாக இருந்தது. அக்கால கட்டத்தில் ஊடகத்தில் கடமையாற்றியவர்கள் அனைவருமே பாடசாலையுடன் தொடர்புடையவர்களாகவே இருந்தனர். பாடசாலையில் சிறப்பாக பிரகாசிப்பவர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊடகத்துறை வாய்ப்பளித்தது. எனவே அதன் அடிப்படையில் நான் றோயல் கல்லூரியில் படிக்கும் பொழுது இலங்கை வானொலியில் தேர்வு நடந்தது. 1000 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர்களில் நானும் ஒருவன். ஆரம்பத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

கேள்வி; ஊடகத்துறையில் நீண்டகால உங்களது சேவைப் பற்றிக் கூற முடியுமா?

பதில்: இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகத்தெரிவு செய்யபட்ட உடனேயே எனக்கு சூரியன் FM இல் இருந்து அழைப்பு வந்தது. சூரியனுக்கு நான் 2001 ஆம் ஆண்டு சென்றேன். அங்கு தொடர்ந்து 34 வருடம் வேலை செய்தேன். அதன் பின் னர் சக்தி FM க்கு வந்து ஆரம்பத்தில் வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றினேன். அதன் பின்னர் சக்தி TVயில் காலை நிகழ்ச்சிகள், Good Morning Sri Lanka என்பவற்றின் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. சக்தி TV இல் பல பொறுப்புகளை வகித்த நான்.

இந்தியா சென்ற பொழுது குமுதம், இந்தியாவை பொறுத்தவரை தமிழ் ஊடகத்தில் ஒரு முன்னணி நிறுவனம். அவர்கள் 10 சஞ்சிகைகள் வெளியிடுகின்றனர். அந்த நிறுவனத்தினுடைய புதிய வானொலி ஆஹா FM ஆஹா 91.9 FM அந்த FM இன் முழுப்பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சிப் பொறுப்பு நிருவாகப்பொறுப்பு என்னிடம் ஒப் படைக்கப்பட்டன. ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் ஒரு நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளையும் வகிக்கின்ற நிலைமைக்கு வந்துவிட்டேன். ஊடகத்தில் எல்லாத்துறைகளிலும், பணி புரிந்த திருப்தி இருந்தாலும், இன்னும் படிக்கக்கூடிய விடயங்கள் நிறையவே
உள்ளன. இலங்கையை சேர்ந்த ஒருவர் இன்னொரு நாட்டில் ஒரு ஊடகத்தில் தலைமைப் பதவி வகித்தது இதுவே முதல் தடவை. எனது அறிமுககாலம் முதலான கடுமையான உழைப்பு என்னில் எனக்கிருந்த நம்பிக்கை அதனை நோக்கிய வெற்றிகரமான பயணம் என்னை நான் வழிநடத்திய முறை என்பன ஊடகத்தில் நான் தங்கு தடையின்றி பயணிப்ப தற்கு ஏதுவான காரணிகளாகும்.

கேள்வி: இந்தியாவில் ஊடகத்துறையில் இணைய வாய்ப்புக்கிட்டியது எப்படி?

பதில்: இந்தியாவில் எனக்கு வாய்ப்புக்கிட்டியதற்கு காரணம். நான் இலங்கையில் 6 வருடங்கள் வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியமை மற்றும் இலங்கை ஊடகத் துறையில் எல்லாத்துறைகளிலும் முக்கிய பதவியில் இருந்தமை. இன்று இந்திய ஊடகத்தில் நான் நிலைத்து நிற்கின்றமைக்கு குமுதம் குடும்பத்தின் நிருவாக பணிப்பாளர் பி.வரதரா ஜனுக்குத்தான் நான் முதல்கண் நன்றி சொல்ல வேண்டும். ஏன் என்றால் நேர்முகத் தேர்வில் நான் தேர்ந்து எடுக்கப்பட்டதன் பின்னர் அவர் என்னிடம் சொன்னது. தன்னுடைய தந்தை தனக்கு குமுதத்தை பார்த்து கொள்ள தந்ததைப் போல உன்னை நம்பி என்னுடைய பிள்ளையை நான் உன்னிடம் ஒப்படைக்கின்றேன் என்றார். எனக்கு முழுமையான சுதந்திரம் தந்து எனது தீர்மானங்களை ஏற்றுள்ளார்.

வானொலி ஆரம்பிக்கும் பொழுது பரீட்சார்த்த ஒளிபரப்பு என்ற ஒன்று ஒலிபரப்பாகும். இலங்கையில் தான் அது பரீட்சார்த்த ஒலிபரப்பு. இந்தியாவில் அதனை சோதனை ஒலிபரப்பு முன்னோட்ட ஒலிபரப்பு என்று கூறுவர். முதன் முதலாக இந்திய வானொலியில் பரீட்சார்த்த ஒலிபரப்பு என்ற வார்த்தை எனது குரலிலேயே ஒலிபரப்பானது. இதனை நேயர்கள் ஏற்றுக் கொண்டனர்.

கேள்வி: இந்தியாவில் இலங்கை ஊடகத் துறையினருக்கான வரவேற்பு எப்படி உள்ளது?

பதில்: இலங்கையில் இருந்து போகிறவர்கள் என்று மட்டுமல்ல. இந்தியாவில் உள்ளவர்களும் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான் வரவேற்பு இருக்கிறது. இலங்கையை விட அங்கு வாய்ப்புகள் அதிகம். புதிய விடயங்களை கற்றுக் கொள்ளலாம். கற்றுகொள்ள வேண்டிய விடயங்கள் அதிகம் உள்ளது. இலங்கைத்தமிழை இந்தியர்கள் எப்போதும் விரும்புகின்றனர். அதனால் எங்களது நிகழ்ச்சிகளை அவர்கள் விரும்புகின்றனர். இன்றும் ஆ.ஏ.அப்துல் ஹமீட்டை இந்தியர்கள் விரும்பக் காரணம் அவரின் இலங்கை தமிழ்.

இது தவிர நான் இலங்கையில் நிகழ்ச்சி செய்யும்போது, இருந்த நேயர்கள், அதிகமானோர் இந்தியாவில் இருக்கின்றனர். எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எங்களுடைய குரலை வைத்துத்தான் அன்பையும் நம்பிக்கையும் வைப்பவர்கள் நேயர்கள். அப்படியான நேயர்களுக்கு உரிய நிகழ்ச்சிகளை வழங்குவது எமது கடமை.

கேள்வி: இலங்கை மற்றும் இந்திய ஊட கங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?

பதில்: இலங்கையை விட இந்தியாவில் பயிற்சிகள் எனும் போது ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சித்தொகுப்பாளர்களுக்கும் சரி பயிற்சிகள் அதிகமாக வழங்கப்படுகின்றன. இலங்கையில் வானொலி சேவைகள் அதற்கான பயிற்சிகளும் மிகக் குறைவானவே உள்ளன. ஆனால் இந்தியாவில் வானொலி ஆரம்பிக்கப் போகிறோம். அல்லது நடந்து கொண்டுள்ளது. அவர்களுக்கான பயிற்சிகள் வெளிநாடுகளிலும் வேறு பிரதேசங்களிலும் வழங்கப்படுகின்றது.

அதனால் அவர்கள் வானொலிக்கு வரும் முதலே அனைத்தையும் தெரிந்துகொண்டு வருகின்றனர்.

தொழில்நுட்ப வசதிகள் அதிகம் தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறிந்து அதற்கேற்ற வகையில் தன்னை வளர்த்துக்கொண்டு வரும் தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்கள், அதிகமாக இருப்பதால்தான் இன்னும் இலங்கை வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலங்கை இரசிகர்க

வலைப்பதிவுகளில் நான்

வலைப்பதிவு எழுத தொடங்கி ஒரு வாரம் ஆகமுன்னரே ‘வலைப்பதிவுகளில் நான்’ என்றமாதிரியான வரலாறு எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் இது ஒரு சிறு அறிமுகம், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு.

நான் முதல் முதலாக வலைப்பதிவொன்றை ஆரம்பித்தது 2005ம் வருட காலப்பகுதியில். அப்போது தமிழ் வலைப்பதிவுகள் தொடர்பாக நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அதனால் நான் எனது TalkOut வலைப்பதிவில் ஆங்கிலத்திலேயே எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தது அதற்கு இன்னொரு முக்கிய காரணியாக அமைந்தது. பாடசாலைக்கல்வியை தமிழில் கற்றதாலும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை படிக்கும் நோக்கம் இருந்ததாலும், ஆங்கிலம் கற்கவேண்டிய ஒரு தேவை இருந்தது. அதன்காரணமாக நான் ஆரம்பித்தது தான் இந்த வலைப்பதிவு. ஆனால் அதுவும் பத்திற்கும் குறைவான பதிவுகளுடன் நின்றுபோனது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை… 🙂 அதன் பின்னராக Yahoo 360ல் ஒரு இரண்டு பதிவுகள் எழுதினேன், ஆனால் அதிலும் தொடரவில்லை.

இறுதியாக 2006ல் (July 19, 2006) Bloggerல் நான் ஆரம்பித்ததுதான் The TalkOut Trojans! வலைப்பதிவு. (இந்த பெயரைப்பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்…) இதையும் நான் எனக்கான ஒரு கற்றல் தளமாகவே கருதினேன். கடந்த ஒன்றரை வருடமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்று வரை ஒரு 64 பதிவுகள் (ஆஹா… உண்மை… நம்புங்க…!) எழுதியாகிவிட்டது. அவற்றில் பல என்னுடைய சுயதம்பட்ட பதிவுகளாகவும், இன்னும் சில கணிமை தொடர்பானவை என்று சொல்லக்கூடிய வகையிலும் அமைந்தவை. ஆங்காங்கே ஒருசில பதிவுகள் தமிழில் அமைந்தாலும், பெரும்பாலானவை ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவை. இவை தவிர இன்னும் சில கூட்டு வலைப்பதிவுகளில் இருந்தாலும், அவற்றிலெல்லாம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருந்ததில்லை.

ஆனாலும் நீண்ட நாட்களாகவே மனதிலிருந்த தமிழ் வலைப்பதிவு ஆசையும் இந்த வலைப்பதிவு வாயிலாக நிறைவேறுகிறது.

இந்த பதிவை இதுவரை வாசித்திருந்தாலே அது உங்களின் பொறுமையை காட்டுகிறது. 🙂 ஆதலால் இப்பதிவை இத்துடன் முடிக்கிறேன். இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

இந்த வலைப்பதிவு…? இன்று…? ஏன்…?

வணக்கம்,

நீண்ட நாட்களாக பல வலைப்பதிவுகளை வாசித்த அனுபவத்தில் நான் அறிந்த ஒரு விடயம், முதலாவது பதிவிற்கு ‘வணக்கம்’ என்ற சொல் இருக்கத்தக்கவாறான தலைப்பை வைப்பது வழக்கமாக உள்ளது. ஆனாலும் ஒரு மாறுதலாக ‘பரீட்சார்த்த பதிவு’ என்று ஆரப்பித்தாகி விட்டது.

அடுத்து என்ன எழுதலாம் என்றால், சரியாக எதுவும் யோசிக்க முடியவில்லை. (வேலைப்பளு அதிகம் என்று(ம்) காரணம் கூறலாம்…) ஆனாலும் எதையாவது எழுதலாம் என்று தொடங்கித்தான் இவ்வாறு அரற்றி/அலட்டிக் கொண்டிருக்கிறேன். இதற்கு மேலும் இவ்வாறு எழுதினால் இதை மொக்கைப் பதிவு என்று இந்திய நண்பர்கள் சொல்லிவிடுவார்கள் என்பதால் (இலங்கையில் மொக்கை என்ற வார்த்தை அதிகம் பாவிக்கப்படுவதில்லை) அடுத்த விடையத்திற்கு வரலாம்.

ஏன் இன்றைய தினம்?

இன்றைய தினம் (29/02/2008) இந்த வலைப்பதிவை தொடங்க காரணம், எதாவது ஒரு காரணத்தால் இந்த வலைப்பதிவு அகில உலக பிரபலமாகினால், உலகெங்கும் பரந்துவாழும் ரசிக பெருமக்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக வருடாந்தம் பெருவாரியாக செலவுசெய்வதை தவிர்த்து, நான்கு வருடங்களுக்கு ஒரு முறையாக மட்டுப்படுத்தவே. 🙂

ஏன்? தமிழில் ஏன்?

இவை எனக்கும் உள்ள கேள்விகள். முக்கிய காரணம் எனக்கு தமிழ் மறக்கிறது. என்ன..? ஆம், நான் தமிழ் மொழிமூல பாடசாலையிலேயெ கல்விகற்றேன், எனக்கு தமிழ் ஒரு வாசகனாக பலவற்றை கொடுத்திருக்கிறது. அவ்வாறிருக்க இது என்ன கதை..? ஆனாலும் இதுதான் கசப்பான உண்மை.

காரணம்… தமிழில் எழுதி பலகாலமாகிறது. பல்கலைக்கழகம் சென்ற பின், ஆங்கில மொழி அறிவை பெற்று ஆங்கிலத்திலேயே எல்லா எழுத்து நடவடிக்கைகளையும் செய்வேண்டி உள்ளது. தமிழில் வாசிப்பதை தவிர்த்து வேறெதுவும் இல்லை. இது எனது தமிழில் ஒரு தேக்க நிலையை தேற்றுவித்துவிட்டது. உதாரணத்திற்கு, நான் இப்போது எழுதுவது கூட ஒரு நிலையான உரைநடையில் இல்லை. ஆகவே எனது தமிழறிவை நான் மீளப்பெற வேண்டும்.

தமிழனாய் இருந்து தமிழ் சரியாக தெரியாது என்று கூறுவது வெட்கக்கேடானது தான். ஆனாலும் அவ்வாறே இருக்காமல் மாற்றத்திற்காய் முயல்வது எவ்வளவோ மேல்…! ஆகவேதான் இந்த வலைப்பதிவு.

நான் உங்களுடம் இருந்தது ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறேன், நான் விடும் பிழைகளை தயவுசெய்து சுட்டிக் காட்டவும். இதற்கு ஈடாக என்ன தருவேன்..?

  • உங்களுக்கு ஒரு வலைப்பதிவு இருந்தால் அங்கு சில பின்னூட்டங்கள் போடுவேன். 🙂
  • இல்லை, என்னால் முடிந்தால் பயனுள்ள விடையங்களை தமிழில் எழுதுவேன்…!

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பரீட்சார்த்த பதிவு

வணக்கம் நண்பர்களே,

இதுவரை தமிழ் வலைபதிவுகளின் வாசகனாக இருந்த நான் இன்றுமுதல் ஒரு வலைப்பதிவராக(?) மாறுகிறேன். நீண்ட நாட்களாகவே தமிழில் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இன்றுதான் அது கைகூடியுள்ளது.

இது ஒரு பரீட்சார்த்த பதிவு (சோதனைப் பதிவு) என்பதால் அடுத்த பதிவிலிருந்து உருப்படியான(?) விடையங்களுடன் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்