நான் ஒரு பதிவு எழுதாத பதிவராக என்னை நிலை நிறுத்திய வருடம் 2010. இந்த வருடம் எனது பழைய நாட்குறிப்புக்களை வைத்து தேற்றிய ஏழு பதிவுகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஐந்து பதிவுகளை மட்டுமே நான் பதிவு என்று நினைத்து எழுதியிருக்கிறேன். ஏன் என்று யோசித்தால் ஒரே ஒரு காரணம் தான் தோன்றுகிறது: எனக்கு எழுத வரவில்லை.

நான் கதைகள் எழுத கதாசிரியனோ, கவிதைகள் புனைய கவுஜனோ இல்லை. என் வாழக்கையின் சில பக்கங்களை பதிந்து வைப்பதே எனது பதிவுகள். இங்கு எனது எண்ணங்களை எழுத்தாக மாற்றுவது அவ்வளவு சாத்தியமானதாக இல்லை. அதுவும் ஆங்கிலத்தில் எழுத முடிந்த அளவுக்கு தமிழில் எழுத முடிவதில்லை; தமிழ் சிக்கலானதாக இருக்கிறது. ஆங்கிலம் ததிங்கினத்தோம் ஆடிய ஒரு காலத்தில் தரமற்ற கட்டுரைகளானாலும் கருப்பொருளே இல்லாமல் 15-20 பக்கங்கள் (தமிழில்) எழுத முடிந்திருக்கிறது. இப்போது அது சாத்தியமாவது இல்லை. ஆங்கில எழுத்தின் கட்டமைப்பு அல்லது கட்டற்ற கட்டமைப்பு எனக்கு வாய்திருப்பது போல் தமிழ் எழுத்து வடிவத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. ஆங்கிலத்தில் எந்த டென்ஸ் (tense) என்று யோசிக்காமல் எழுதுவது போல் தமிழில் முடிவதில்லை. முக்கியமாக தமிழில் ஸ்பெல்லிங் (spelling) மிகவும் குழப்பமானதாக இருக்கிறது. எல்லாவற்றிலும் மிக முக்கியமாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் என்னால் எழுத முடிவதில்லை (உதாரணம்: இந்த பதிவு).
எழுத ஆரம்பித்து முடிக்காமலே பத்துக்கும் அதிகமான பதிவுகள் இருக்கின்றன. அவற்றில் பாதி ஒரு வருடத்துக்கும் பழையவை. அவற்றை இனியும் எழுதி முடிக்கும் எண்ணம் இல்லை. எனவே இந்த வருடத்தில் எழுதியிருக்க வேண்டிய சில பதிவுகளின் தொகுப்பாக, சம்பவங்களின் தொகுப்பாக இந்த பதிவு.
இந்த வருடம் ஆரம்பித்தபோது நான் கொழும்பில் ஒரு மென்பொருள் பொறியியலாளன். வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் ஒரு ஆராச்சி மாணவன். கடந்து வந்த 12 மாதங்களில் பல நல்ல அனுபங்களையும் சில நல்ல மனிதர்களையும் கடந்து வந்திருக்கிறேன். நான் ஏப்ரல் 2009ல் மென்பொருள் பொறியியலாளனாக வேலைக்கு சேர்ந்த போதே எடுத்த ஒரு முடிவு மார்ச் 2010ல் வேலையை விடுவது. வேலையில் சேரும் போதே இதை சொல்லிவிட்டு வேலையில் சேர்ந்த ஒரு விசித்திரமான கதை அது. அதன் பின்னர் என்ன என்று திட்டமிட்டபோது முதன்மையாக இருந்தது ஆராய்ச்சி படிப்பு. இதில் சிறுவயது கனவு, இலட்சியம் என்று எதுவுமம் இல்லை, 3-4 வருடங்கள் திட்டமில்லாமல் கடந்து போகும் என்கிற சோம்பேறி திட்டம் மட்டுமே இருந்தது.
நான் 2009 இறுதியில் இருந்தே பல பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பித்திருந்தேன். 2010இன் தொடக்கத்திலிருந்து அவர்களின் பதில்கள் வர ஆரம்பித்தன. தம்மிடம் என்னைவிட திறமையான விண்ணப்பங்கள் இருக்கின்றன என்று MIT (US) சொன்னது, மிகவும் நியாயமான கூற்று. Purdue (US) ஸ்காலர்ஷிப் தரமாட்டேன் என்று சொன்னது, நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். University of Wollongong (AU) ஸ்காலர்ஷிப் இல்லை என்றது, இருந்தாலும் நான் வருவதாக இல்லை என்று பதில் போட்டேன். University of New South Wales (AU) எல்லாம் தரலாம், செப்டெம்பரில் வா என்றது. National University of Singapore (SG) ஜூலையில் வா என்றது, Queensland University of Technology (AU) பெப்ரவரி 15 வா என்று ஜனவரி 30 மின்னஞ்சல் அனுப்பியது. கடைசியில் நான் ஏப்ரல் 30 வருவதாக QUTஐ சமாதானப்படுத்தினேன்.
மார்ச் 31க்கு பின்னர் வேலையில்லா வெட்டிப்பயலாக நண்பர்களோடு ஒரு இரண்டு வாரங்கள் செலவிட்ட பின்னர் ஏப்ரல் கடைசி வாரத்திலிருந்து அவுஸ்திரேலிய வாசம். இந்த புது தேசத்தில் என் முதல் மாத அனுபவங்கள் இங்கே.
இதற்கு பின்னரான எட்டு மாதங்களிலும் வாசித்தலும் எழுதுதலுமாகவே வாழ்க்கை கடந்து போய்விட்டது. தனிமையை விரும்பும் எனக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. எப்போதாவது மனிதர்களுடனும் மிகுதி நேரம் எல்லாம் கணனியுடனும் எனது பொழுதுகள் நகர்கின்றன. ஆரம்பத்தில் விசித்திரமானதாக இருந்த ஒரு புது நாட்டின் வாழ்க்கை முறை, சில நாட்களிலேயே சாதாரணமானதாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் வசித்த வீடு மாணவர்களுக்கான ஒரு குடியிருப்பு, ஆண்களும் பெண்களுமான அந்த சர்வதேச மாணவர்களுடன் இருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம். அதன் பின்னர் தனித்த வீடும், மின்சாரம், தொலைபேசி, நீர் என்று கட்டணங்கள் செலுத்துவதும் ஒரு அனுபவம் தான்.
இதை தவிர சொல்லிக்கொள்ளும் படி செய்த மற்றுமொரு வேலை கண்டதையும் காணாததையும் படமெடுத்து திரிந்தது. எடுத்த சில படங்களை இங்கு காணலாம்.
கடைசியாக பயணிப்பதற்கென்றே விசாலமான இந்த நாட்டில் சில தலங்களை தரிசித்து வரும் வாய்ப்பு இந்த வருடத்தில் அமைந்தது. இரண்டு தடவை தங்க கடற்கரைக்கும், பிரிஸ்பேன் நகரை சுற்றிலும் உள்ள வேறு சில இடங்களுக்கும் அவ்வப்போது சென்று வந்திருக்கிறேன். நவம்பர் மாத இறுதியில் ஒரு 3300கிமீ பெரும் பயணம். பிரிஸ்பேனிலிருந்து மெல்பேர்ணுக்கு நண்பன் அருணனுடன் பயணித்தது. சிட்னி வழியாக பல சுற்றுலா நகரங்களையும் பார்த்து சென்ற இந்த பயணத்தின் இன்னுமொரு முக்கிய அம்சம் நான் முதன் முதலாக வாகனத்தை ஓட்டிச் சென்ற நீண்ட பயணம் இது.
படங்களுடன் இந்த பதிவை மேலும் தெளிவாக இங்கே வாசிக்கலாம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்…



