திட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும்

நான் திட்டமிடல் இல்லாமல் பெரும்பாலும் எதையும் செய்வதில்லை(???!). திட்டமிட்டு செய்ய நினைக்கும் பல வேலைகளையும் சரியாக செய்வதில்லை. கடந்து சென்ற 2011ல் செய்வதற்கென்று பெரிதான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆக எதையும் சாதித்து கிழிக்கவும் இல்லை.

நிமல் 2011

நாம் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களும் தான் எமது எண்ணங்களை இன்னமும் விசாலமாக்குகின்றன. மார்ச் மாதத்தின் பின்னர் சந்தித்த சில புதிய நண்பர்களும் அவர்களுடனான பயணங்களும் பல புதிய அனுபவங்களைத் தந்தன. நாடு, மொழி, நிறம் கடந்து பல பண்பாட்டு பின்புலங்களில் இருந்து வரும் மனிதர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்தது. வாழ்க்கையின் போக்கில் ஒரு வருடம் சிலவேளைகளில் குறுகியதாகவும், மற்றும் சிலவேளைகளில் நீண்டதாகவும் உணரப்படும். ஒரு வருடத்தின் பின்னரான இலங்கைப் பயணத்தில் இதை நேரடியாக காணமுடிந்தது.

இந்த வருடம் நான் பெரிதாக எதையும் செய்வேண்டும் என்று நினைக்கவுமில்லை, செய்யவுமில்லை. கடந்த வருடங்களைப் போலவே அவ்வப்போது புகைப்படங்கள் எடுப்பதை மட்டுமே ஒரு பொழுதுபோக்காக இருந்தது. இந்த ஆர்வம் வீடியோக்கள் எடுப்பதாக மாறிய பின்னர் புகைப்படங்களை எடுப்பது குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டது. ஆனாலும் சரியாக திட்டமிடல் இல்லாமல் நினைத்த மாதிரியான உருப்படியான வீடியோக்களை உருவாக்குவதும் சாத்தியமாகவில்லை.

முடிவாக 2011ல் முழுமையாக செய்ததாக எதுவுமே இல்லை. 2012, பார்க்கலாம்…

புதுவருட வாழ்த்துகள்…!

Posted in பொது | 2 Comments

லோன் பைன் கோவாலா சரணாலயம்

லோன் பைன் கோவாலா சரணாலயம் 130க்கும் அதிகமான கோவாலாக்களைக் கொண்ட உலகின் முதலாவதும் பெரிதுமான கோவாலா சரணாலயமாகும். அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேன் நகருக்கும் கோல்ட் கோஸ்ட் நகருக்கும் அண்மையில் அமைந்துள்ள இந்த சரணாலயம், பலவகையான சுற்றிலாப் பிரயாணிகளையும் கவரும் ஒரு பிரதான இடமாகும்.

கோவாலாக்கள் அவுஸ்திரேலியாவுக்கே உரித்தான விலங்குகளில் முக்கியமானவை. லொன் பைன் அழகிய சோம்பேறிகளான கோவாலாக்களை பார்கக்கூடிய ஒரு முக்கிய இடமாகும். அத்தொடு இங்கு கோவாலாக்களுன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிவதும் விசேடமானதாகும்.

லோன் பைன் கோவாலா சரணாலயம்

லோன் பைனில் கோவாலாக்கள் மட்டுமல்லாமல் காங்காருகள், காட்டு நாய்கள், கழுகுகள், ஆந்தைகள் என பல வகையான அவுஸ்திரேலிய விலங்குகளுக்கும் பறவைகளும் உள்ளன. லோன் பைன் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமாக கோவாலாக்கள் இருந்தாலும், பாம்புகளுன் படம் எடுத்துல், கங்காருகளுக்கும் பறவைகளுக்கும் உணவூட்டுதல் போன்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை. இவற்றைத் தவிரவும் செம்மறி ஆடுகள் காட்சியும் பறவைகள் காட்சியும் தவறவிடாமல் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகளாகும்.

ஆகவே, எப்போதாவது பிரிஸ்பேனுக்கோ, கோல்ட் கோஸ்டுக்கோ வந்தால் தவறாமல் லோன் பைன் கோவாலா சரணாலயத்துக்கும் வந்து செல்லுங்கள்.

Posted in பயணம் | Tagged | Leave a comment

இணையத்தில் தகவல் பாதுகாப்பு

கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப மாற்றங்கள் நாம் இணையத்தில் அதிக நேரம் செலவிடும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில், கல்வி போன்றவற்றை தாண்டியும் நாம் பலவிதமான தனிப்பட்ட தேவைகளுக்காகவும் இணையத்தை பயன்படும் தேவை உருவாகியிருக்கிறது. இந்த புதிய சாத்தியங்கள் நாம் எமது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் அதிகளவில் பகிரும் ஒரு நிலையையும் உருவாக்கியிருக்கிறது.

இணையத்தில் தகவல் பாதுகாப்பு

இவ்வாறு இணையத்தல் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதும் அவ்வாறு பகிரப்படும் விடையங்களின் தகவல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் எனது சில அவதானிப்புக்களையும் கருத்துக்களையும் இங்கு பகிர்கிறேன்.

எனக்கு இணையத்தில் என்னைப் பற்றிய அதிகமான தகவல்களை பகிரும் பழக்கம் உள்ளது. ஆனாலும் இது எல்லாருக்கும் பொருந்தும் என்றும் நான் நினைக்கவில்லை. சிலருக்கு பாதுகாப்பு காரணங்களால் இது முடியாமல் போகலாம். சிலருக்கு தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

உங்களின் கருத்து என்ன?

Posted in தொழில்நுட்பம் | Tagged , , | Leave a comment

புத்தாண்டு வாழ்த்துகள்

புத்தாண்டு வாழ்த்துகள்

வருசப் பிறப்பாம், தமிழ்ப் புத்தாண்டாம், தமிழ்-சிங்கள புத்தாண்டாம். எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு. இந்த தமிழ் வருசப்பிறப்பு என்றது வர வர கடும் குழப்பமாகிட்டுது. தை மாசமா, சித்திரை மாசமா, இரண்டுமா, இரண்டுமில்லையா எண்டு பல குழப்பங்கள். ஆனாலும் எனக்கு ஜனவரி 1 தான் புது வருசப்பிறப்பு. ஏனெண்டா நான் பின்பற்றுற கலண்டரில முதல் மாசம் ஜனவரி எண்டு இருக்கிறதால, அந்த மாசத்தின்ட முதல் நாள் 1ம் திகதி எண்டு இருக்கிறதால, ஜனவரி 1 வருசப்பிறப்பு என்றது தான் எனக்கு பொருத்தமானது எண்டு நினைக்கிறன். மற்றப்படி மற்றாக்களுக்கு எப்ப வருசப்பிறப்பு என்றது எனக்கு பிரச்சினை இல்லை.

எது எப்பிடியோ, எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், (நீங்க எப்ப கொண்டாடுறீங்களோ அப்ப)

Posted in பொது | Leave a comment

PhD அடிப்படைகள்

ஒரு PhD மாணவனான என்னிடம் பல சந்தர்ப்பங்களிலும் PhD பற்றி பல சந்தேகங்கள் கேட்கப்படும். இது அவ்வாறான அடிப்படையான சந்தேகங்களையும் PhD கல்வி தொடர்பான மேலதிக தகவல்களையும் தரும் ஒரு பதிவு இது.

PhD அடிப்படைகள்

PhD?

  • ஆங்கிலத்தில் Doctor of Philosophy, லத்தின் மொழியில் Philosophiae Doctor, தமிழில் முனைவர்/கலாநிதி
  • இது குறிப்பிட்ட துறையில் ஆய்வு செய்து, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து பெறும் ஒரு உயர் கல்விப் பட்டம்.
  • Doctor of Philosophy என்பதில் philosophy என்பது கிரேக்க மொழியில் ‘அறிவின் மீதான காதல்’, “love of wisdom” என்று அர்த்தப்படும்.

PhD என்றால் என்ன?

அடிப்படையில் PhD கல்வி ஒரு ஆராய்ச்சிக் கல்வி. ஆனால் இது நோபல் பரிசை வாங்கித்தரும் அளவுக்கான பெரியா ஆராய்ச்சியாக இருப்பதில்லை, (நோபல் பரிசு கிடைத்தாலும் தப்பில்லை). நீங்கள் உலகின் பெரும் ஆராய்ச்சியாளராகவும் ஆகப்போவதில்லை. சரியாக சொல்வதென்றால் PhD என்பது ஒருவருக்கு ஆராய்ச்சி செய்யும் திறமை இருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு சந்தர்ப்பம். PhD என்பது ஒருவகையில் ஆராய்ச்சி செய்வதற்கான ஒரு பயிற்சி.

ஏன் PhD செய்ய வேண்டும்?

  • பலரும் பல காரணங்களுக்காக PhD செய்வார்கள்.
  • சிலருக்கு இது தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதற்கான ஒரு பயிற்சி.
  • சிலருக்கு தமது தொழிற்துறைசார்ந்த அறிவை வளரக்கும் ஒரு சந்தர்ப்பம்.
  • சிலருக்கு தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் ஒரு வழி.
  • ஏன் செய்யக்கூடாது என்று நினைக்கும் இன்னும் சிலர்,
    என்னைப் போல, (ஒருவகையான வெட்டி பந்தாவுக்காகவும் செய்யலாம்).

ஒரு PhD கற்கை நெறியில் சேர என்ன தேவை?

  • ஏதாவது ஒரு நோக்கம், அந்த நோக்கத்தை அடைவதற்கு நேரத்தையும் உழைப்பயும் கொடுக்க தயாராயிருத்தல்.
  • இதை தவிர, பெரும்பாலும் ஒரு Masters degree அல்லது first class அல்லது second class, upper division உள்ள ஒரு Bachelors honors degree, அல்லது இவற்றுக்கு சமனாக கருதக்கூடிய வேறு தகமைகள் (துறைசார்ந்த வேலை அனுபவம் போன்றவை).
  • ஆராய்ச்சிப் படிப்பை வெற்றிகரமாக தொடரும் திறமை உள்ளவர் என்பதை நிரூபித்திருத்தல்.
  • அது முன்னைய கல்விகளில் செய்த (சிறு) ஆராய்ச்சி செயற்திட்டங்கள் வாயிலாகவோ, வேறு வழிகளிலோ காட்டப்படலாம்.

எவ்வளவு பணம் செலவாகும்?

  • பொதுவாக PhD மாணவர்களிடம் பாடநெறிக்கான கட்டணம் அறவிடப்படுவதில்லை. (மிகவும் குறைவு, நான் அறிந்து யாரும் இல்லை)
  • ஏதாவது புலமைப்பரிசில் மூலமாக மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்காக ஒரு கல்வி உதவித் தொகை வழங்கப்படலாம்.
  • அல்லது மாணவர்கள் கற்பித்தல் உதவியாளர்களாகவோ (teaching assistants) ஆராய்ச்சி உதவியாள்ர்களாகவோ (research assistants) வேலை செய்யவும் முடியும்.

எவ்வளவு காலம் செலவாகும்?

  • இது நாட்டுக்கு நாடு, கல்வி நிறுவனத்துக்கு நிறுவனம், துறைக்குத் துறை வேறுபடும்.
  • குறைந்த பட்சம் 2 வருடங்களாகவும், பெரும்பாலும் 3 அல்லது 4 வருட்ங்களாகவும், பொதுவாக அதிக பட்சம் 6 வருடங்களாகவும் இருக்காலாம்.
  • ஆனாலும் 10-12 வருடம் PhD செய்யும் சிலரையும் சந்தித்திருக்கிறேன்.

PhD முடிவில் என்ன?

  • பொதுவாக ஒரு பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிக் கட்டுரை (ஆய்வேடு) சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • இது சில சந்தர்ப்பங்களில் 100,000 அல்லது அதற்கும் அதிக சொற்களை கொண்டதாக இருக்கலாம்.
  • பெரும்பாலான நாடுகளில் ஒரு நேர்முகத் தேர்வில் தேர்வாளர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
  • இந்த தேர்வுகளில் சித்தி அடைந்தால், பொதுவாக உங்கள் பெயருக்கு முன்னால் 2 எழுத்துக்களும், பெயருக்கு பின்னால் 3 எழுத்துக்களையும் சேர்க்க முடியும்.

இது PhD தொடர்பான ஒரு அடிப்படையான அறிமுகம். உங்களுக்கும் PhD தொடர்பான சந்தேகங்கள் இருந்தலால் தெரியப்படுத்தவும், என்னால் இயலுமானவரை அவற்றுக்கான பதில்களை தர முயற்சிக்கிறேன்.

தேவை இருந்தால் மீண்டும் இன்னுமொரு பதிவில் சந்திக்கலாம்…

Posted in அனுபவம் | Tagged , | 10 Comments