பிரிவுகள்
தொழில்நுட்பம்

எழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம்.

இப்போது பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் சிலருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர்களின் வாசிப்பு என்பது பாடப்புத்தகங்களுள்ளும் சில இணையப்பக்கங்களுள்ளும் உள்ளடங்கிவிடுவதாகவே தெரிகிறது. புத்தக வாசிப்பு என்பது, அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் வாசிப்பது, அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. நான் என்னைப்பற்றி யோசிக்கிறேன். எனது வாசிப்புப்பழக்கமும் அந்த மாணவர்களை விடவும் அதிகம் வித்தியாசமாக இல்லை. புத்தக வாசிப்பு வருடத்திற்கு இரண்டு மூன்று என்றாகிவிட்டது. வலைப்பதிவுகளை தேடித்தேடி வாசித்த காலமும் அடங்கிவிட்டது.

இதைப் போலவே எழுத்துப் பழக்கமும் எழுதும் வழக்கமும் குறைந்து விட்டது. ஒரு காலத்தில் வலைப்பதிவுகளில் எழுதுவது, கருத்துச் சொல்வது, சண்டை பிடிப்பது என்று எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது தமிழில் எழுதுவது மிக மிக குறைந்து விட்டது. எப்போதாவது எழுத நினைத்தாலும் எண்ணங்கள் ஒரு கோர்வையாக வர மறுக்கின்றன. இந்த பதிவும் மிக குழப்பமாக இருந்தால் அது தான் காரணம்.

இவ்வாறாக எழுத்து-வாசிப்பு பழக்கம் குறையும் நேரத்தில் செய்தி, பொது விடையங்கள் என்று எல்லாவற்றுக்கும் ஓலி-ஒளி ஊடகங்களையே நாடுவது பழக்கமாகிவிட்டது. வீடியோ பதிவுகள் பொட்காஸ்ட் பதிவுகள் என்று மாறிவிட்டது. அதிலும் முக்கியமாக பொட்காஸ்ட் வழியாக வரும் ஒலிப்பதிவுகள் மூலமாக நாளாந்தம் தகவல்களை பெறுவது இலகுவாக இருக்கிறது. பொதுவாக வேலைக்குப் போகும் நேரத்தில் கேட்பது வழக்கம். இதைத் தவிர யூடியூப் வீடியோக்களும் பார்ப்பது அதிகரித்திருக்கிறது.

ஆனால் இந்த சூழலில் நான் அவதானிக்கும் ஒரு விடையம், தமிழில் அதிகமாக இந்த மாதிரியான ஒலி-ஒளி வடிவில் பதிவுகள் இல்லை. நான் இங்கு தேடுவது ஆராய்ந்த தகவல்களை அடிப்டையாகக் கொண்ட ஆவணப்படங்கள் அல்லது பதிவுகள். யூடியூபில் அவ்வாறான பதிவுகள் தமிழில் மிக மிக குறைவாகவே கிடைக்கின்றன. பொட்காஸ்ட் என்று பார்த்தால் தமிழில் எந்த வகையான பதிவுகளுமே குறைவு தான். இல்லை நான் தான் சரியான பதிவுகளை தேடிக் காணவில்லையா?

Photographer: Martha Holmes. © Time Inc

என்னுடைய இப்போதைய எதிர்பார்ப்பு இனியாவது இவ்வாறான பதிவுகளை தமிழில் உருவாக்குவதில் நாம் ஆர்வம் செலுத்தலாம். இன்னும் இரண்டு வருடங்களின் பின் நாம் பார்த்தால் தமிழ்ச் சூழலில் இணையப் பயன்பாடு இன்னமும் அதிகரிக்கப் போகிறது. அதுவும் ஒலி-ஒளி பதிவுகளை இலகுவாக பெறக்கூடிய இணைய சேவை வசதிகளும் அதிகரிக்கப் போகிறது. ஆகவே நாம் சரியான முறையில் பயனுகள்ள தகவல்களை இந்த வடிவிலான பதிவுகளாக உருவாக்கினால் அவற்றால் பலரும் பயன் பெறுவார்கள் என்பது என் எண்ணம்.

பி.கு.: நீண்ட நாட்களின் பின் எழுதிய இந்த தமிழ்ப் பதிவில் இருக்கும் தமிழ்ப் பிழைகளுக்கு என்னை மன்னிக்கவும். நன்றி.

பிரிவுகள்
அனுபவம்

மகிழ்ச்சியாக வாழ்வது என்பது…

எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.

இங்கு பெற்றொர் பிள்ளைகள் என்ற உறவானது ஒருவரின் வாழ்வினூடு இன்னுமொருவர் வாழ்வதாகவே இருக்கிறது. பெரும்பாலான பெற்றொர் தங்கள் வாழ்நாளில் தம் விருப்பிற்கோ மகிழ்விற்கோ வாழ்வதில்லை. அவர்கள் தமக்கான செலவுகள் எதுவும் செய்வதில்லை, பொருட்கள் எதுவும் வாங்குவதில்லை, பயணங்கள் எதுவும் செல்வதில்லை. பிள்ளை வளர்ப்பு என்பது மட்டுமே இங்கு முன்னிறுத்தப்படுகிறது. இங்கு வளரும் பிள்ளைகளும் பெற்றோராலும் சமூகத்தாலும் எதிர்பார்கப்படும் குறித்த வாழ்க்கைப் பாதையில் மட்டுமே செல்ல பழக்கபட்டுவிடுகிறார்கள். இதில் பெற்றோரின் எதிர்பார்ப்பு தங்கள் எதிர்பார்புக்கமைய பிள்ளைகள் வாழவ்வது என்று ஆகிறது. பிள்ளைகளின் எதிர்பார்பு பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவது என்று ஆகிவிடுகிறது. தமது வாழ்க்கையின் மகிழ்ச்சியை அடுத்த தலைமுறையில் தேடுவதற்கு அவர்களும் தயாராகிவிடுகிறார்கள்.

எல்லாரும் பெற்றார் பிள்ளைகளுக்காகச் செய்யும் தியாகங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதன் காரணமாக அந்த பெற்றோர் எதிர்பார்ப்பதை பிள்ளைகள் செய்வது அவசியம் என்றும் சொல்கிறார்கள். பெற்றோர் பிள்ளைகள் மகிழ்வாக வாழ்வதற்கே அறிவுரை சொல்வதாகவும் சொல்கிறார்கள். அப்படியாயின் மகிழ்ச்சியாக வாழும் பிள்ளைகள், தங்கள் மகிழ்ச்சியை விடுத்து, பெற்றோர் சொல்லும் வழியில் மகிழ்ச்சியை தேடுவதில் உள்ள நியாயம் என்ன? பெற்றாருக்காக தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்யும் பிள்ளைகள், தங்கள் பிள்ளைகள் தமக்காக அவர்களின் மகிழ்ச்சியை தியாகம் செய்ய எதிர்பார்ப்பதில் உள்ள நியாயம் தான் என்ன? இந்த முடிவில்லா சுழற்சியின் முடிவு தான் என்ன?

குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை மற்றவரின் மகிழ்ச்சிக்காகத் தியாகம் செய்தால், இறுதியில் யாராவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? தமது மகிழ்ச்சிக்குக் காரணம் மற்றவரின் தியாகம் எனின், அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நிலையானதாக இருக்குமா?

மற்றவரை பாதிக்காமல் தங்கள் மகிழ்ச்சிக்காக வாழ்பவர்களை சுயநலவாதிகளாக முத்திரை குத்தி, அவர்களை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கி, அவர்களின் மகிழ்ச்சியில் தவறு காணவே எல்லாரும் தயாராக இருக்கிறார்கள். ஒரு தனிநபர் மற்றவர்களை பாதிக்காத வகையில் மகிழ்சியுடனும் திருப்தியுடனும் வாழ்வதில் என்ன தவறு?

மற்றவர் வகுத்த பாதையில் வாழ்வது மட்டுமா இங்கு முக்கியமாகிறது? எல்லோரும் மகிழ்சியாக வாழ்வதே முக்கியம் என்றல்லவா சொன்னார்கள்!

பிரிவுகள்
Oliyoodai Tamil Podcast

General Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம்

இந்த ஒலியோடை பதிவில் General Data Protection Regulation (GDPR)என்றால் என்வென்று தெரிந்துகொள்ளலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மேலும் வாசிக்க:
https://en.wikipedia.org/wiki/General_Data_Protection_Regulation
https://www.theguardian.com/technology/2018/may/21/what-is-gdpr-and-how-will-it-affect-you

முகப்புப் படம்:
Pete Linforth (TheDigitalArtist) https://pixabay.com/en/europe-gdpr-data-privacy-3220208/

இந்த ஒலியோடை பதிவு தொடர்பான உங்கள் எண்ணங்களை #oliyoodai என்று குறித்து பகிருங்கள்.

பிரிவுகள்
தொழில்நுட்பம் Oliyoodai Tamil Podcast

Google I/O 2018: நடந்தது என்ன?

இந்த ஒலியோடை பதிவில் Google I/O 2018 நிகழ்ச்சியில் என்ன புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று பார்க்கலாம்.

இந்த ஒலியோடை பதிவு தொடர்பான உங்கள் எண்ணங்களை #oliyoodai என்று குறித்து பகிருங்கள்.

பிரிவுகள்
தொழில்நுட்பம் Oliyoodai Tamil Podcast

Big Data: தெரிந்து கொள்வோம்

இந்த ஒலியோடை பதிவில் Big Data என்றால் என்ன என்று பார்க்கலாம்.

அண்மைய செய்திகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகளவான தகவல்களை சேமித்து, அவற்றை எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னணியில் இருக்கும் இந்த Big Data என்ற சொற்தொடரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் வாசிக்க:

முகப்புப் படம்:

இந்த ஒலியோடை பதிவு தொடர்பான உங்கள் எண்ணங்களை #oliyoodai என்று குறித்து பகிருங்கள்.

பிரிவுகள்
அனுபவம்

நான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்!

இதைப்பற்றி இதுவரை யாரிடமும் எங்கேயும் கதைத்ததில்லை. ஆனால் இன்று என் கதையை பொதுவெளியில் பகிரலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு 12-13 வயது இருக்கும்போது, நான் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். அதன் விளைவுகள் இன்னமும் என் வாழ்வில் எங்கோ இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

நான் 7ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. நான் கொழும்புக்கு இடம்பெயர்ந்து வந்து ஒருவருடத்துக்கும் உள்ளான காலப்பகுதி அது. பாடசாலை முடிந்ததும் ஒரு குறித்த உறவினர் வீட்டில் சென்று நிற்பது வழக்கம் வழமையாக அந்த வீட்டில் பல உறவினர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த குறிப்பிட்ட நாளில் உறவினர் எல்லோரும் எங்கோ சென்றிருந்தனர் (எதற்காக என்பது நினைவில் இல்லை). அந்த குறித்த உறவினர் மட்டுமே வீட்டில் இருந்தார்.

வழமைபோலவே நான் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் அமர்ந்து ஒரு சிறவர் நிகழ்ச்சியையோ திரைப்படத்தையோ பார்க்கத் தொடங்கினேன். அந்த உறவினர் என் அருகில் இருந்த கதிரையில் வந்து அமர்ந்தார். அது வழமையாகவே இருந்தது. அவர் என் தொடையில் தன் கையை வைத்தார். அது சாதாரணமாக இருந்தது. அவர் என் காற்சட்டை வழியே கையை விட்டு என் ஆணுறுப்பை தொட்டார். அது குழப்பமானதாக இருந்தது. அவர் என் ஆணுறுப்பை வெளியே எடுத்து நாக்கால் நக்கத் தொடங்கிரார். அது பிழையாக இருந்தது.

எனக்கு என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை, ஆனால் அது தவறானது என்று மட்டும் விளங்கியது. நான் அவரைத் தள்ளிவிட்டு என் பாடசாலைப் பையையும் தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடினேன். பிரதான வீதி வரை ஓடிவந்த எனக்கு வீடு எந்தப்பக்கம் என்பது தெரியவில்லை. பார்த்த நினைவிருந்த சில கட்டடங்களை குறிப்பாக வைத்து ஒரு திசையாக நடக்கத் தொடங்கினேன். பேருந்தில் செல்ல பணமும் இருக்கவில்லை, வழியும் தெரியாது. ஒருவாறாக வழிகேட்டு வீட்டுக்கு போய்விட்டேன். ஆனால் அந்த நேரத்தில் அம்மா என்னை கூட்டிவருவதற்காக அந்த உறவினர் வீட்டுக்கு போயிருந்தார். அங்கு நான் இல்லை என்று திரும்பி வந்த அவரிடம் சொல்ல என்னிடம் காரணம் எதுவும் இருக்கவில்லை. என்ன நடந்தது என்றும் சொல்லவில்லை. அதன் பின்னர் இன்றுவரை யாரிடமும் சொல்லவுமில்லை.

இது என்ன பெரிய விடயமா என்று சிலருக்கு இருக்கலாம். அது மீண்டும் நடக்கவும் இல்லை. அந்த உறவினர் இருக்கும் இடங்களில் தனிமையா இருப்பதை தவிர்த்து வந்திருக்கிறேன். இப்போது அவரை நேரடியாக பயம் இன்று பார்க்கவும் முடிந்திருக்கிறது. ஆனாலும், 21 வருடங்களின் பின்னரும், அந்த சம்பவத்தின் விளைவுகள் என்னை சில வகைகளில் பாதித்திருப்பதாகவே உணர்கிறேன். குடும்பங்கள் உறவுகள் என்ற கட்டமைப்புக்கள் மீது அவநம்பிக்கையான ஒருவனாக நான் வளர்ந்திருக்கிறேன். நான் எப்போதும் தனிமையை விரும்புபவனாகவும் தேவையில்லாமல் மற்றவர்களிம் தொடர்புகளை தவிர்ப்வனாகவும் இருக்கிறேன். என்னுடைய இருபதுகளின் நடுப்பகுதி வரையுமே சுய சந்தேகம் உள்ள ஒருவனாகவே இருந்திருக்கிறேன். இதற்காக நான் சொல்லவரவில்லை இவை எல்லாவற்றுக்குமே அந்த சம்பவம் தான் காரணம் என்று. ஆனால் அதன் பாதிப்புக்கள் என்னில் இருந்திருக்காது என்றும் என்னால் சொல்ல முடியாது.

ஆனால் இப்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகு நான் ஏன் இதைப்பற்றி பகிர்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அண்மையில் இதேபோன்ற நெருக்கிய குடும்ப அங்கத்தவர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான வேறொருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இது தனக்கு மட்டுமே நடந்ததாக நினைத்துக்கொண்டிருந்ததையும் அறிய முடிந்தது. நான் என் கதையை இவ்வாறு பொதுவெளியில் பகிர்வதன் மூலமாக அவர்களும் தாங்கள் தனித்திருக்கவில்லை என்பதை உணரமுடியும். இந்த பிரச்சனை தொடர்பான உரையாடல்களின் ஆரம்பப்புள்ளியாகவும் இது இருக்கட்டும்.

பின்குறிப்பு: எனக்கு பாலியல் தொல்லைகள் செய்த நபர் யார் என்று நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் அவரோ அவரின் வளர்ந்த பிள்ளைகளோ இதைக் கட்டாயம் வாசிப்பார்கள். நான் தன் பெயரை சொல்லிவிடுவேனா என்ற சந்தேக்திலேயே அவர் வாழட்டும். அவரின் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளை அவருடன் தனித்து விட நேர்ந்தால் அவதானமாக இருக்கட்டும். பெறாமகனுக்கும் பேரனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

பிரிவுகள்
தொழில்நுட்பம் Oliyoodai Tamil Podcast

3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்

உங்கள் கணினியிலோ கைபேசியிலோ சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான 3-2-1 தகவல் காப்புத் திட்டம் அதாவது 3-2-1 Backup Strategy என்றால் என்வென்று இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.

திடீரென்று ஒருநாள் பாவித்துக்கொண்டிருந்த கணினி பழுதடைந்துவிடுகிறது. உங்கள் தகவல்களின்பிரதிகள் வேறு எங்காவது இருக்கிறதா? இந்த தேவைக்கான ஒரு வழிவகைதான் 3-2-1 தகவல் காப்புத் திட்டம்.

மேலும் வாசிக்க:
Ruggiero, Paul, and Matthew A. Heckathorn. Data Backup Options. Technical paper. US-CERT, 2012. https://www.us-cert.gov/sites/default/files/publications/data_backup_options.pdf

முகப்புப் படம்:
rawpixel – https://pixabay.com/en/cloud-paper-hand-world-business-2104829/
OpenClipart-Vectors – https://pixabay.com/en/hard-disk-storage-computer-159264/

பிரிவுகள்
தொழில்நுட்பம் Oliyoodai Tamil Podcast

Android Go – Android One: தெரிந்து கொள்வோம்

இன்றைய கைபேசிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் அண்ட்ராய்டு இயங்குதளத்தின் சிறப்புப் பதிப்புக்களாக உள்ள Android Go பதிப்பையும் Android One பதிப்பையும் பற்றி இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.

Android Go அல்லது Android Oreo (Go edition) என்பது ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த பாவனை அனுபவத்தை கொடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. எனவே இது மிகவும் மலிவுவான அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் புதிய செயலிகளையும் சேவைகளையும் இலகுவாக பயன்படுத்த வழிவகை செய்யும். (https://www.android.com/versions/oreo-8-0/go-edition/)

தூய்மையான ஒரு வடிவத்தை அனைத்து உற்பத்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களிலும் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்கிறது. இவை தொடர்ச்சியான மென்பொருள் புதுப்பிப்புகளையும் பாதுகாப்பு புதுப்பிப்புக்களையும் பெறுவதால் ஒப்பீட்டளவில் வேகமாகவும் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் செயல்படும் என்று எதிர்பார்கலாம். (https://www.android.com/one/)

இந்த ஒலியோடை பதிவு தொடர்பான உங்கள் எண்ணங்களை #oliyoodai என்று குறித்து பகிருங்கள்.

பிரிவுகள்
தொழில்நுட்பம் Oliyoodai Tamil Podcast

Facebook – Cambridge Analytica: நடந்தது என்ன?

பேஸ்புக் – கேம்பிறிச் அனலிடிகா: கடந்த வாரம் முழுவதும் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனக்களின் பெயர்களும், அதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப விளக்கங்களும். இந்த வார ஒலியோடை பதிவில் ஒரு சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.

பிரிவுகள்
பொது

உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர் தமிழ்நாட்டுக்காரர், தமிழர். வழக்கம் போலவே அரசியல் தான் முக்கிய அம்சம். அதைத் தாண்டி கதைப்பதும் குறைவுதான். அது இந்தியாவிலும் தேர்தல் காலம், இலங்கையிலும் தேர்தல் காலம், நான் அப்போது இருந்த குவின்ஸ்லாந்து மாநிலத்திலும் தேர்தல் காலம். அரசியல் இயந்திரங்களின் மீதான எமது ஒருமித்த அவநம்பிக்கைகளை தவிர்துப் பார்த்த‍தில் அன்றைய கலந்துரையாடலில் நாம் வந்தடைந்த முடிவு தான் ‘உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது’.

ஒரு சராசரி இலங்கைத்தமிழனாக எனக்குத் தெரிந்த இந்திய அரசியல் அம்சங்கள் சில உண்டு. திராவிட இயங்கங்கள், கருணாநிதி, ஜெயல‍லிதா, காங்கிரஸ், நேரு குடும்ப‍ம், அண்மையில் அன்னா கசாரேவும் மோதியும். இவ்வளவும் தெரிந்த‍தற்கே முக்கிய காரணம் இந்தியத் தொலைக்காட்சிளும் செய்தி ஊடகங்களும் தான். அந்த வகையில் எனது புரிதல்களும் இந்த தொலைக்காட்சிகள் தேர்ந்தெடுக்கும் பார்வையிலேயே தங்கியிருக்கிறது. அதைத்தாண்டி பொதுவான ஒரு இந்தியனின் பார்வையில் இந்திய அரசியலை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதில்லை.

இதுவே இலங்கை அரசியலைப்பற்றிய ஒரு சராசரி இந்தியத்தமிழனுக்குத் தெரிந்திருப்பது இன்னமுமே மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியர்கள் பார்க்க இலங்கைத் தொலைக்காட்சிகளோ இதர பொது ஊடகங்களோ இல்லை. அவர்களுக்கான மூல ஆதாரங்களாக இருப்பது இலங்கைச் செய்திகளை, அரசியலை இந்தியத் தொலைக்காட்சிகளிலும் இதர செய்தி ஊடகங்களிலும் கதைக்கும் இந்தியர்கள், இந்திய அரசியல்வாதிகள். ஆக, பொதுவான ஒரு இலங்கைத் தமிழனின் பார்வையில் இலங்கை அரசியலை பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கும் கிடைப்பதில்லை.

இந்த சூழலில், தமக்கான தனி நிகழ்ச்சி நிரலில் இயங்கும் ஊடகங்களூடாகவும் அரசியல்வாதிகள் ஊடாகவும் நாம் பெறக்கூடிய தகவல்கள் ஒருபோதும் பூரணமானதாகவோ தூய்மையானதாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஒரு சராசரி குடிமகனுக்கு இருக்க‍க்கூடிய பிரச்சினைகளையும் அவர்கள் எடுக்கும் அரசியல் தெரிவுகளையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் ஒரு இந்தியத்தமிழனின் தெரிவும், சிரிசேனவுக்கு வாக்களிக்கும் ஒரு இலங்கைத்தமிழனின் தெரிவும் மற்ற பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவும் வாய்ப‍்பில்லை.

புரிதலும் தெளிவும் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சூழலில் என்னால் செய்ய முடிந்த‍து மற்றவரின் அரசியலை புரிந்து கொள்ள முயல்வது, இல்லாவிட்டலா அவர்களின் அரசியல் தெரிவில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிவது. ஆக, அந்த கலந்துரையாடலின் முடிவில் நம் இருவருக்கும் பொதுவான புள்ளியாக இருந்தது குவின்ஸ்லாந்து அரசியல் மீதான எமது புரிதல் மட்டும் தான். கடைசியில் குவின்ஸ்லாந்து தேர்த‍லில் வந்த அரசியல் மாற்றமும் நாம் எதிர்பார்த‍து தான். காரணம் அது நம் இருவருக்கும் புரிந்த அரசியல். அதை தாண்டி – உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது.